ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தினை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் அதாவது ஜனவரி 9ஆம் தேதிமுதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இயக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தின செய்தியாளர்களைச் சந்திக்கையில், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு இரண்டாம் தர மக்களாக நடத்துகின்றது. எங்களின் 6 அம்ச கோரிக்கைகள் குறித்து இப்போது முடிவு கூற முடியாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். மேலும் கோரிக்கைகள் குறித்து இப்போது முடிவு எடுக்க முடியாது எனவும் பொங்கல் முடிந்து பேசிக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்படுகின்றது.  எங்களிடம் பாகுபாடு பார்க்காதீர்கள், எங்களை ஒதுக்காதீர்கள் என அரசை நாங்கள் கேட்கின்றோம். எனவே எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் கட்டாயம் வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்தனர். 


தொழிற்சங்கங்கள் இவ்வாறு கூறிய நிலையில், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் இரண்டு கோரிக்கைகளை ஏற்பதாக கூறிவிட்டோம். தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நாளை வழக்கம்போல் பணியில் ஈடுபடுவர். அரசு தற்போது உள்ள நிதி நெருக்கடியில் மேற்கொண்டு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழலில் உள்ளது என தெரிவித்துள்ளார். 


போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள்


1. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு கொடுக்க வேண்டும்.


2. ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படியை உடனடியாக வழங்கவேண்டும். ஊதிய ஒப்பந்தம் வருகின்றபோது, ஓய்வூதியர்களுக்கு உரிய ஒப்பந்தப் பலனைக் கொடுக்கவேண்டும்.


3. 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்.


4. காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.


5. கருணை அடிப்படையிலான வேலைக்கு தகுதியானவர்களுக்கு வேலை வழங்கவேண்டும்.


6. 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் முறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்சன் வழங்கவேண்டும்.


போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை அதாவது போக்குவரத்து கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்துக் கழகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சிஐடியூ, ஏஐடியூ மற்றும் ஹெஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.