இருதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு , தவறான ஊசி செலுத்திய மருத்துவருக்கு 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 56) இவரது மகன் சரவணக்குமார் (31) இன்ஜினியர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.


கடந்த 2017-ம் ஆண்டு வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பஸ்ஸில் ஏறிய போது நெஞ்சி வலி காரணமாக திரும்பி வீட்டுக்கு வந்தார். அவரது உறவினர்கள் அதே பகுதி சஞ்சீவீராயன் கோயில் தெருவில் உள்ள தனியார் (வசந்தா  ஆஸ்பத்திரிக்கு) நெஞ்சு வலிக்காக சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.


இதன் பின்னர் மருத்துவமணையின் மருத்துவர் நந்திவர்மன் (வயது 61) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர். இந்நிலையில் சரவணக்குமார் தனது  இ.சி.ஜி. ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு மருத்துவரை சந்தித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறி ஒரு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் சரவணகுமாரின் உடல்நிலை மோசமாகவே அவரது உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர்.


அதற்கு டாக்டர், அவருக்கு சாதாரண வலி தான் ஒரு பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் சரவணகுமார் உயிரிழந்தார். உறவினர்களுக்கு சரவணகுமார் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு தண்டையார்பேட்டை காவல் துறையில் புகார் அளித்தனர்.  இது எடுத்த தண்டையார்பேட்டை போலீசார்  சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பிரேத பரிசோதனையில் அறிக்கையில் டாக்டர் சரவணகுமாருக்கு தவறான ஊசி போடப்பட்டு உள்ளது என்று உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இருதய நோய் பாதிக்கப்பட்டவருக்கு ஊசி மூலம் தவறான மருந்து வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது.  இதையடுத்து இந்த வழக்கு சென்னை பெருநகர 15-வது ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுதா விசாரித்து வந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


இந்த தீர்ப்பில் சரவணகுமாருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர் நந்திவர்மனுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் பணம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இது தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.