தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை கண்டறிய மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களின் விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் நகை கடன் பெறுவதில் தமிழகம் முழுவதும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகளுக்கு தள்ளுபடி செய்வதற்கு முன்பு. கடல் வாங்கியவர்களின் ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டுகள் மற்றும் புகைப்படம் சேகரிக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சில கூட்டுறவு சங்கங்களில் விதிமுறைகளை மீறி முறைகேடாக கடன் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களும் இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் வரை நகை கடன் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இதனை மீறி நகை கடன் வழங்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களிடம் அறிக்கை பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


கூட்டுறவுக்கடன் நகை மோசடியை யார் செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை - ஐ.பெரியசாமி எச்சரிக்கை


இதில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் தொப்பூர் செக்காரப்பட்டி சேவை மையத்தில் தர்மபுரி மாவட்டம் பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 187 பவுன் நகையை அடகு வைத்து 41 லட்சம் கடன் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டுறவு மையத்தின் கணக்காளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே வெங்கடேசன் தர்மபுரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் 15 லட்சம் நகை கடன் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், கவரிங் நகைகளுக்கு கடன் வழங்கி 11 லட்சம் மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய கூட்டுறவு வங்கி இயக்குனர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் நகை அடகு வைக்காமலேயே அடகு வைத்தது போல் கணக்கு காட்டி 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது, இதுகுறித்து நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தனியார் நகை அடகு கடை நடத்தக் கூடியவர்கள் தங்களிடம் அடகு வைக்கக்கூடிய நகைகளை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தொடர் மோசடி காரணமாக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி ரத்து செய்ய வாய்ப்புள்ளது.