காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.



காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் என 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் - 98, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11 ஆகிய இடங்களுக்காக தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று முதற்கட்ட தேர்தலும், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.



 

வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வேட்பாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வேட்பு மனு அளித்தனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் பகுதியில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 15-வது வார்டுக்கான வேட்புமனுவை பட்டதாரி இளம்பெண் அ. ஜெயப்பிரியா (27)  தாக்கல் செய்தார். பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ள ஜெயப்பிரியா தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.



 

திருமணமாகி இருபது நாட்கள் ஆன நிலையில் தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளம் பெண்கள் பாசறை துணை செயலாளராக தான் பணிபுரிந்த வந்ததாகவும், தனது தந்தையும் அதிமுக நிர்வாகி என்று கூறும் ஜெயப்பிரியா, இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், சுயேச்சையாக போட்டியிடுவதாக தெரிவித்தார்.




 

முன்னதாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிக்கும், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 14 பெண் வேட்பாளர்கள் உள்பட 20 வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். அதிமுக பெண் வேட்பாளர்கள் மங்களகரமாக ஒன்றாக வந்து வேட்புமனு தாக்கல்  செய்த நிகழ்வால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.