மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள். மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுவை அண்மையில் திருத்தியமைத்தார் முதலமைச்சர். 1971ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில திட்டக்குழுதான் கடந்த ஆண்டு அப்போதைய அரசால் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு என மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாகத் திருத்தி அமைக்கப்பட்ட குழுவின் துணைத்தலைவராக  பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான ஜெ.ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் இராம.சீனுவாசன், பகுதிநேர உறுப்பினர்களாக திராவிடப் பொருளாதார பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், மண்புழு வேளாண்மை வல்லுநர் பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தீனபந்து, டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ, மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்தமருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மல்லிகா சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். உறுப்பினர் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். 


நியமனத்தை அடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைக் குழுவினர் நேரில் சென்று சந்தித்தனர். மரியாதை நிமித்தமாக நிகழ்ந்த இந்தச் சந்திப்பில் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் பேராசிரியர் ஜெயரஞ்சனுக்கு விவசாயம் கொள்கை மற்றும் திட்டமிடுதல் துறையும், பேராசிரியர் ராமஸ்ரீநிவாசனுக்கு திட்ட ஒருங்கிணைப்புத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இதர உறுப்பினர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  


சந்திப்பில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோரும் உடனிருந்தனர். 


Also Read: மக்கள் தொகை, நோயளவு அடிப்படையில் தடுப்பூசி; வந்தாச்சு புதிய தடுப்பூசி பாலிசி.