தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பின்னர், அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இதையடுத்து, 2023-2024ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது.
மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து அலுவல் ஆய்வுக்குழுகூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் ஏப்ரல் 21ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 29ம் தேதி தொடங்கி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.


மசோதா என்ன சொல்கிறது?


இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2001ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.


இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.


உயரும் பத்திர பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம்:


இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது. 


கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு காரணமாக சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 23, 24, 27 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


பின்னர், மார்ச் 28ஆம் தேதி நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கைக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர்.


மேலும் படிக்க: Rahul Gandhi : ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ்...தேர்தல் பிரச்சாரத்தில் கொந்தளித்த ராகுல் காந்தி..!