கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், மே 13ம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வியூகம் அமைத்து செயல்பட்டு வரும் பாஜக, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.


போட்டி போடும் காங்கிரஸ், பாஜக:


ரத்து செய்தது மட்டும் இன்றி, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான லிங்காயத் மற்றும் வொக்கலிகாவுக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இப்படி அதிரடியான நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.


தன்னுடைய பங்கிற்கு காங்கிரஸ் கட்சியும் இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நேற்று, கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று பிடாரில் பேசிய ராகுல் காந்தி, "ஜனநாயகத்தின் மீது பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. வெறுப்பை பரப்பி வன்முறையை தூண்டி வருகிறது.


தேர்தல் பிரச்சாரத்தில் கொந்தளித்த ராகுல் காந்தி:


பசவண்ணாவின் (12 ஆம் நூற்றாண்டு சமூக சீர்திருத்தவாதி) 'கர்ம பூமி'யாக பிடார் உள்ளது. ஜனநாயகத்தைப் பற்றி ஒருவர் முதலில் பேசி ஜனநாயகத்தை நோக்கிய பாதையைக் காட்டினார் என்றால் அது பசவண்ணாதான். இன்று நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவது வருத்தமளிக்கிறது.


பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பசவண்ணாவின் கொள்கைகளான சகோதரத்துவம், சம வாய்ப்புகள் மற்றும் அனைவரும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்ற கொள்கைகளை தாக்கி வருகின்றன. அவர்கள் இந்துஸ்தானில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறார்கள். 


ஏழை மற்றும் நலிந்த பிரிவினரிடமிருந்து பணத்தைப் பறித்து இரண்டு அல்லது மூன்று பணக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள். காங்கிரஸ் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார். 


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (கர்நாடக பொறுப்பு), கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவரும் பால்கி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஈஸ்வர் காந்த்ரே உள்ளிட்டோர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.