விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு விஜய் அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோட்டில் உள்ள சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், “ விஜய் உத்தரவின்பேரில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது” என்றார்.
முன்னதாக, வாரிசு திரைப்படம் ரீலிஸ் செய்வதற்கு முன்பாக கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தி அலுவலகத்தில் சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது வந்த நிர்வாகிகளுக்கு பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டது. அப்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “விஜய் அவரது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டு வருகிறார். இனிவரும் காலங்களில் அவருக்கு எப்போது ஃப்ரீ டைம் இருக்கிறதோ மீண்டும் ரசிகர்களை சந்தித்து போட்டோ சூட் எடுப்பார். கடந்த சில மாதங்களாகவே மாவட்ட தலைவர்கள் எல்லாம் விஜயை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், ரசிகர்கள் என அனைவரும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.” என்றார். அப்போதே இந்த சந்திப்பு அரசியல் கட்சிகள் உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளாக உள்ளது என பல்வேறு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அப்போது இது அரசியல் தொடர்பான சந்திப்புகள் கிடையாது, வெறுமனே ரசிகர்கள் தொடர்பான சந்திப்புகள் என்று கூறப்பட்டது.
நற்காரியங்களில் மக்கள் இயக்கம்..?
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. வாரந்தோறும் இயலாதவர்கள் பால் மற்றும் ரொட்டி வழங்குதல், ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு மற்றும் புத்தகம், ஆங்காங்கே வலியவர்களுக்கு அன்னதானம், இரத்த தான செய்ய செயலிகள் என பல்வேறு சேவைகளை முன்நின்று செய்து வருகின்றனர். ஒரு வகையில் பார்த்தால் இது நல்ல காரியம் என்றாலும், எதிர்கால அரசியல் வாழ்க்கையை முன்னிட்டு விஜய், தனது ரசிகர்கள் மூலம் இந்த சேவைகளை செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்தது.