இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அதனால் அங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இலங்கையில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பிழைப்பதற்காக அங்குள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உறுதியளித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இலங்கையில் பரிதவித்துக் கொண்டிருக்கிற தமிழர்கள் தமிழ்நாடு வந்துகொண்டிருக்கிறார்கள். அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் தமிழர்களுக்க்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவு காலம் ஏற்படுத்தி கொடுக்கும்.ஈழத்தமிழர்கள் விவகாரத்தை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இந்நிலையில், ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த இலங்கை நாட்டு எம்.பி வேலுகுமார், அங்குள்ள நிலவரம் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும், இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த கருத்து பற்றி கேட்டதற்கு, “உண்மையில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும். இதுவரை இந்தியாவில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர்களுடன் ஒப்பிடும்போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் செயல்பாடுகள் முன்னோடியாக காணப்படுகின்றது. குறிப்பாக அவருடைய உள்நாட்டு நிர்வாகம், அங்கிருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இலங்கையில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களுடனான உண்மையான தொப்புள்கொடி உறவை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் அவரது வேலைப்பட்டுகளை நாங்கள் வரவேற்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
நேர்காணலைக் காண:
பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாமல், இலங்கை அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. எந்த பொருளின் விலையை கட்டுப்படுத்துவது என தெரியாமல் எல்லாமே உயர்ந்து நிற்கிறது. அப்படி அதிக அளவில் பாதிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று பெட்ரோல் , டீசல் விலை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “போர் சூழலைவிட மோசமான மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அரசுமீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், வேறு நாட்டுக்கு சென்றுவிடலாம் என மக்கள் நினைக்கின்றனர்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்