எல்லை தாண்டி கடலில் மீன்பிடித்ததாக விசைப்படகுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 


இதையடுத்து, இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து நாளை மறுநாள் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி 29ம் தேதி ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். 






இந்தநிலையில், தமிழக மீனவர்கள் 7 பேர் கைது : சிங்களப் படையினரின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க: கோவை காரில் சிலிண்டர் வெடித்த வழக்கு ; கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை கடந்த 20-ஆம் தேதி சிங்களப் படை கைது செய்தது. அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழக மீனவர்களை கைது செய்து சிங்களப் படை மீண்டும் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது. 






கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் பத்தாவது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது. தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.