பிரேதத்தின் தலை மாயம்

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி கிராமத்தில், மின்கம்பம் விழுந்ததில் பலியான பள்ளி மாணவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், அவரது தலை வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

 

சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், புதைக்கப்பட்ட சிறுமியின் உடலில் தலை மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிறுமியின் தலையை துண்டித்தது யார்? எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



மின்கம்பம் விழுந்து பலி

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், சித்திரவாடி கிராமத்தைச் சோந்தவா் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா . இவா் மதுராந்தகம் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 5-ஆம் தேதி அவுரிமேடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு கிருத்திகா வந்தாா். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த சாலையோர மின்கம்பம் அவா் மீது விழுந்ததுஅதில் பலத்த காயம் அடைந்த கிருத்திகாவை பெற்றோா் சென்னை எழும்பூா் அரசு மருத்துவமனையில் சேர்த்தனா்.



 

இந்த நிலையில், கிருத்திகா கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து கிருத்திகாவின் உறவினா்களும், கிராம மக்களும் இந்த சம்பவம் தொடா்பாக மின்வாரியத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுராந்தகம்-கூவத்தூா் சாலை, சித்திரவாடி பேருந்து நிறுத்துமிடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.



 

மதுராந்தகம் டிஎஸ்பி துரைபாண்டியன், சித்தாமூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சிவராஜ், முருகன் ஆகியோா் சாலை மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மின்வாரியம் மூலம் இழப்பீடுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். அதன்பிறகு, சிறுமியின் உடல் கூறாய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி, தலை துண்டித்து எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

காவல்துறை விசாரணை

 

இதுகுறித்து காவல்துறையினர் மீண்டும் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றுதான் அமாவாசை மற்றும் சூரிய கிரகணம்  ஆகியவை நடைபெற்று முடிந்துள்ளதால் மாந்திரீக வேலைக்காக, இது போன்ற சம்பவத்தில் யாராவது ஈடுபட்டு இருக்கிறார்களா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.