கரூரில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டியினை, தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் சுடரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஏற்றி, விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.


கரூர் மாவட்டம் புலியூர் டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியினை தேசியக்கொடி மற்றும் ஒலிம்பிக் சுடரை மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் ஏற்றி வைத்து, தடகள விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.




பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை குறுவட்ட அளவிலான போட்டிகளில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் முதல், இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் 840 மாணவ, மாணவியர்கள் பங்கு பெற உள்ளனர். போட்டிகளில் கலந்து கொள்வது எளிதானதல்ல. இந்த நிலையை அடைவதற்கு உங்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம். அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு போட்டியில் கலந்து கொள்வது எளிதானதல்ல. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, அதுவும் மாவட்ட அளவிலான இந்த தடகளப் போட்டிகளில் இந்த அளவிற்கு வந்து உள்ளீர்கள். எனவே, இதில் பங்கு கொள்வது மிக சிறப்பான விஷயமாகும். இதில் கண்டிப்பாக வெற்றி பெற நீங்கள் அயராது உழைக்க வேண்டும். வெற்றி பெற வில்லை என்றால் நீங்கள் துவண்டு விடக்கூடாது. எனவே, அனைத்து மாணவர்களும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு முயற்சிப்பது ஒரு வாழ்விற்கு உறுதுணையாகவும், இந்த விளையாட்டு என்பது உங்களை நல்வழிப்படுத்தும். உங்களை சிறந்த ஒழுக்கமிக்க மாணவ, மாணவியர்களாக இருக்கவும், அதேபோல வாழ்நாளில் ஒரு சிறந்த குடிமகனாக உருவாக்குவதற்கும், விளையாட்டு மிக முக்கியம். இதை எல்லாம் தாண்டி விளையாட்டு மூலம் உங்களுக்கு ஒரு பணி அமைந்தால்,  அது ஒரு சான்றாகும். விளையாட்டு என்பது நம் விளையாடும் போது கடினமாக ருசித்து, அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். விளையாட்டுப் போட்டியில் பெரிய அளவில் வெற்றி பெற்றால் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும்போது அது ஒரு போனஸ் வெற்றி தான்.




நீங்கள் தடகளப் போட்டியின் போது ஓடும் நேரத்தை சிறு சிறு நேரமாக குறைத்து, நீங்கள் முயற்சிகளை செய்தால் கண்டிப்பாக சாதனையாளர்களாக வருவீர்கள். மேலும், வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்த போட்டியில் உறுதியாக பயிற்சி எடுத்து விளையாடினால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். ஆகவே, விளையாட்டு என்பது ஒரு உன்னதமான விஷயம். எனவே, அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் முழு மனதுடனும், முழு ஆர்வத்துடனும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டியிடுங்கள். அனைவரும் பங்கு பெறுங்கள் வெற்றி பெறுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் உங்கள் வாழ்வில் சிறந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனையாக உருவாக வேண்டும் அதன் மூலம் சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும்” என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.


முன்னதாக, பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் கரூர் வருவாய் மாவட்ட அளவில் குடியரசு தின தடகள போட்டியினை ஒட்டி, தேசியக்கொடி ஏற்றி வைத்தும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு, மரியாதையை ஏற்றும், ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து தடகள விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கீதா, துணை மேயர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட கல்வி அலுவலர் கன்னிசாமி, மணிவண்ணன் (தொடக்கக்கல்வி), கனகராஜ், தனியார் பள்ளி மாவட்ட உடற்கல்வி ஆய்வலர்  கோபாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, சதீஷ், செந்தில்வேலன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.