Special Vande Bharat Rail: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


நெருங்கும் தீபாவளி:


அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நடப்பாண்டில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த பண்டிகை வரும் நிலையில், அதற்கு மறுநாள் (நவம்பர் 13) ஆம் தேதி பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் வெளியூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் எளிதாக தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவது என கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தயாராகி வருகிறார்கள். இதற்கான பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கிட்டதட்ட 10,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.  இதற்கிடையில் ரயில் பயணம் பற்றி சொல்லவே வேண்டாம். 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால் கடந்த ஜூலை மாதமே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. 


சிறப்பு வந்தே பாரத் ரயில்:


இந்நிலையில், மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு வந்தே பாரத் ரயிலை நாளை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "வண்டி எண் 06067 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், எழும்பூரில் இருந்து நாளை 9ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக, மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 11.15 மணிக்கு வந்து பேரும். இந்த ரயில்லி 8 பெட்டிகள் உள்ளன. இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், "சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி வழித்தடத்தில் நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு - நாகர்கோவில் இடையே இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. நவம்பர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளில் ரயிலானது இயக்கப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.