பொதுமுடக்க காலத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் புதிய படங்களை வெளியிட ஏற்பட்ட தாமதம் மற்றும் நேரடியாக ஓடிடி தளங்களுக்கு திரைப்படங்களை விற்றது காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை உள்ளடக்கிய தென்னிந்திய சினிமாத்துறை 1000 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு பொது முடக்க காலத்தில் ஓடிடி தளங்களுக்கு பல்வேறு திரைப்படங்கள் விற்கப்பட்டன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று தொடங்கி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் திரைப்படம் வரை பல்வேறு பெரிய திரைப்படங்கள் கூட திரையரங்கிற்கு கிடைக்கவில்லை.
கொரோனா முதல் அலை பரவலுக்கு பிறகு கொடுக்கப்பட்ட பொதுமுடக்க தளர்வை போல் அல்லாமல், கொரோனா மூன்றாம் அலை பரவல் குறித்து அரசாங்கங்கள் எச்சரிக்கையாக இருப்பதால், இரண்டாம் அலைக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளன.
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஜூலை மாதத்தில் திறக்கப்பட்டாலும். ஒரு மென்மையான சோதனை காலமாகவே இருக்கும் என கூறும் திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்குகளை பொறுத்த வரையில் இயல்பு நிலை என்பது ஆகஸ்ட் மாத மத்தியில் வரும் சுதந்திர தின காலத்தில் தான் தொடங்கும் என கூறுகின்றனர். ஒரு வேளை திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளிக்க முன்வந்தாலும், பெரிய நடிகர்களின் திரைப்பட வெளியீட்டின் மூலம் மட்டுமே திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க முடியும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் நம்பிக்கையாக உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துக் கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை தியேட்டர்கள் திறப்புக்கு செப்டம்பர் மாதம் வரை ஆகலாம் என கூறும் தியேட்டர் உரிமையாளர்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 50% இருக்கைகளில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் தனிமனித இடைவெளி விதி அமலில் இருக்கும் என்கின்றனர்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து புதிய வெளியீடுகள் குறித்த ஆர்வம் பெரிய அளவில் இல்லை என்ற சூழலே அங்கு நிலவுகிறது.
தெலங்கானா மாநில திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு தெலங்கானா அரசுக்கு எழுதியுள்ள கடித்தில் திரைப்பட டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் தயாரிப்பாளர்கள் யாரும் ஓடிடி தளங்களில் திரைப்படங்களை வெளியிடும் முடிவை எடுக்க வேண்டாம் எனவும் அக்டோபர் மாதம் வரையில் காத்திருக்கும்படியும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. தெலங்கானாவிலும் 50% இருக்கைகளுக்கான தனிமனித இடைவெளி கட்டுப்பாடுகள் இருக்கும் என கூறப்படும் நிலையில் இரவு காட்சிகளை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநில பார்வையாளர்களை பொறுத்தவரையில் நட்சத்திர மோகம் என்பது முன்பை காட்டிலும் குறைந்துவிட்டதாக கூறும் திரையரங்கு உரிமையாளர்கள், பெரிய நட்சத்திரங்களின் படமாக இருந்தாலும் முதல் வாரத்திற்கு பிறகு வீழ்ச்சியை சந்திக்கலாம் என கூறுகின்றனர்.