தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஒரு முனை மற்றும் மும்முனை மின்சார இணைப்புகளில் RCD - (residual-current device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. மின் அதிர்வை தவிர்த்து உயிரினங்களை காப்பதற்காக இந்த சாதனத்தை பொறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் , மின் பகிர்மான விதி தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. 



எலெக்ட்ரிக் ஷாக்கை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய முன் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தி இருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட RCD சாதனத்தை பொறுத்த வேண்டும்.


தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின் சுற்றிலும் தனித்தனியாக RCD சாதனத்தை பொருத்த வேண்டும்.


அத்தகைய அமைப்பினால் அந்தந்த கட்டிடப் பகுதியில் உள்ள மனிதர்கள். அந்தந்த பகுதியில் உண்டாகும் மின் பழுது காரணமாக ஏற்படும் மின் அதிர்ச்சியில் இருந்து காக்கப்படுவார்கள். புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில்  RCD கருவியை நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும்.RCD சாதனத்தை பொறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை அறவே தடுக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் நோக்கமாகும். சட்டப்பூர்வ வழிமுறைகளை அனைத்து பொதுமக்களும் இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேவை அறிந்து அந்த கருவியை பொருத்த அனைவரும் முன்வர வேண்டும்.