திருத்தணி அருகே வறுமையின் காரணமாக தனது மகனின் சைக்கிளையே உழவு இயந்திரமாக பயன்படுத்துவது குறித்து செய்தி வெளியானதையடுத்து தமிழக நிதி அமைச்சர் உத்தரவின் பேரில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தும், நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். 


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பிங்கி பூ விவசாயம் பயிரிட்டு வருகிறார். பெரும்பாலான விவசாயிகள் வறுமையில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி வரும் சூழலில் இவரும் வறுமையின் பிடியில் சிக்கி  உழவு பணிக்கு பயன்படுத்த இயந்திரங்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகன் தனஞ்செயனின் சைக்கிளையே உழவு இயந்திரமாக பயன்படுத்தி, அதனை தனது 11 வயது மகனை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு உழவு பணிகளை மேற்கொண்டு வந்தார். 11 வயது சிறுவனின் சைக்கிளைக் கொண்டு விவசாயம் செய்து வருவது குறித்து அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் மூலம் செய்தி பரவியது.  


ஆள்மாறட்டம் செய்து நிதி மோசடி: தமிழக காவல்துறை எச்சரிக்கை!


இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜனின் உத்தரவின் பேரில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் சி. எச்.சேகர் இன்று அகூர் கிராமத்திற்கு வருகை தந்து சிறுவனுக்கு சைக்கிளையும், அவரது குடும்பத்தாருக்கு அரிசி பருப்பு எண்ணெய் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்கி கவுரவித்தார். 11 வயது சிறுவனின் சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்தியது குறித்து செய்தி அறிந்து திமுக சார்பில் வழங்கப்பட்ட சைக்கிள் மற்றும் நிவாரணம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




முன்னதாக, இதுதொடர்பாக நாகராஜன் கூறுகையில், "வேறு வழியில்லாமல், நான் எனது மகனின் சைக்கிளை பயன்படுத்துகிறேன். எனக்கு வேறு வழியில்லை. எனவே, இதை நான் செய்ய வேண்டியிருந்தது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டுள்ள 11 வயது மகன் தனஞ்செழியன், தந்தை மற்றும் தாத்தாவைப் போலவே விவசாயத்தையும் விரும்புகிறார். வயலில் வேலை செய்யும்போது, நாங்கள் சோர்வடையும் போதெல்லாம், தனஞ்செழியன் எங்களுக்கு உதவி செய்வார்.


"நான் என் அப்பாவுக்கு உணவைக் கொண்டு வரும்போது, ​​நான் உழுவதற்கு அவருக்கு உதவுகிறேன். நான் பிடித்து அழுத்துவேன், அப்பா கலப்பை இழுப்பார்" என்று தனஞ்செழியன் கூறினார்.


நாகராஜின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன், சம்மங்கி வளர்ப்பது கடினமான பணி என்றார். மேலும், “முதல் ஆறு மாதங்களுக்கு நீங்கள் எந்த வருமானத்தையும் எதிர்பார்க்க முடியாது. எங்களால் நிலைமையைக் கையாள முடியவில்லை. எனவே, இந்த முறையை நாங்கள் கண்டுபிடித்தோம். ஊரடங்கின்போது, ​​நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், இந்த நிலம் இப்போது எங்களிடம் உள்ளது. எனவே, அதை விற்க முடியாது" என்று கூறினார்.


அகூர் கிராமத்தில் மட்டும் இதுபோன்ற 800 சிறு விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்கள் கடந்த ஆண்டில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிதியுதவி தேவைப்படுகிறது என்று விவசாயிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு சைக்கிள் ஏர் ஆனது... தம்பியும் மகனும் மாடானது.... உழவையும் மாற்றிய ஊரடங்கு!