தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் சஷ்டி ஆகும். கடந்த திங்கள்கிழமை சஷ்டி தொடங்கிய நிலையில், வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது. திருச்செந்தூர் கடலோரத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்வதை காண கோடிக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குவிவது வழக்கம் ஆகும்.
வீரமகேந்திரபுரியின் அரசன் சூரபத்மன்:
சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம். சூரபத்மனுடன் பேச்சுவார்த்தை நடத்த முருகப்பெருமான் வீரபாகுவை தூது அனுப்பினார். ஆனால், வீரபாகுவை சூரபத்மன் சிறைபிடிக்க முயற்சித்தான். வீரபாகு சூரனின் மகன் வச்சிரவாகு, சகத்திரவாகு ஆகியோரை கொன்று திருச்செந்தூர் திரும்பி முருகனிடம் நடந்தவற்றை விளக்கமாக கூறினார்.
பின்னர், சூரபத்மனுடான போரில் முருகப்பெருமான் நேரில் களமிறங்கினார். வீரமகேந்திரபுரியின் அரசனாக திகழ்ந்த அரக்கர்களின் அரக்கனான சூரபத்மன் பல மாபெரும் சக்திகளை கொண்டவன். மாயாஜாலங்களில் கை தேர்ந்தவனான அவன் முருகப்பெருமான் முன் தோன்றி பல அம்புகளைத் தொடுத்தான்.
ஆனால், முருகப்பெருமான் முன்பு அவனது மாயாஜாலங்கள் எதுவுமே வேலை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் பரம்பொருளான பரமசிவனின் மைந்தனுடன்தான் நாம் போர் செய்கிறோம் என்ற உண்மை அறிந்தும் சூரன் ஆணவத்துடன் போர் புரிந்தான். அவனுக்கு முருகன் தேவர்களை விடுவித்துவிடு, உன்னை மன்னிக்கிறேன் என்று அருள்புரிந்தும் ஆணவத்துடன் தொடர்ந்து போர் புரிந்தான்.
இருகூறாய் பிளந்த வேல்:
சூரனின் சேனையை முருகன் வதம் செய்ய, முருகனின் சேனையை அழிக்க முடிவு செய்த சூரன் சிவபெருமான் வரத்தால் தனக்கு கிடைத்த இந்திரஞாலம் எனும் தேரைப் பயன்படுத்தி முருகனின் சேனையை தூக்கிச் செல்ல உத்தரவிட்டான். ஆனால், முருகனின் சேனையை பிரபஞ்ச உச்சிக்கு தூக்கிச் சென்ற இந்திரஞாலத்தை முருகனின் வேல் தடுத்து நிறுத்தி, மீண்டும் முருகனிடம் சேனையை ஒப்படைத்ததுடன் இந்திர ஞாலம் தேரும் முருகன் வசமானது.
சிவபெருமான் வரத்தால் தனக்கு கிடைத்த சூலப்படையையும், அம்புபடையையும் சூரன் அனுப்பினான். ஆனால், முருகப்பெருமானின் வேல் முன்பு அவை செயலிழந்து போனது. அனைத்தையும் இழந்த சூரன் முருகப்பெருமானிடம் இருந்து தப்பிப்பதற்காக அனைத்து இடங்களும் ஓடி ஒளிந்தான். நடுக்கடலில் மரமாக மாறி சூரன் ஒளிந்து கொண்டான். ஆனால், அவன் சென்ற இடமெல்லாம் அவனை துரத்திச் சென்ற முருகப்பெருமானின் வேல் நீரினுள் மாமரமாய் ஒளிந்திருந்த சூரனை இருகூறாய் பிளந்தது.
சூரசம்ஹாரம்:
இருகூறாய் பிளந்த சூரபத்மனின் ஒரு பாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும் முருகன் மாற்றினார். அந்த மயிலே முருகனின் வாகனமாகவும், மற்றொரு பாதி சேவல் முருகன் கொடியிலும் உள்ளது. வீரமகேந்திரபுரியை ஆண்ட அரக்கன் சூரபத்மனை வதம் செய்து வெற்றித் திருமகனாக முருகப்பெருமான் திருச்செந்தூர் திரும்பினார். இதுவே 6 நாட்கள் சஷ்டியாக தொடங்கி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் செய்த பிறகு, அதற்கு அடுத்த நாள் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
சூரபத்மன் ஆண்ட வீரமகேந்திரபுரி தற்போது கடலுக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், இது இலங்கைக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் ஒரு தீவாக இருந்ததாகவும் புராணங்களில் உள்ளது. நடப்பாண்டிற்கான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி திருச்செந்தூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதைக்காண உலகம் முழுவதும் உள்ள முருகப் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குவிவது வழக்கம். பக்தர்கள் வெள்ளத்தில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் இந்த கண்கொள்ளா காட்சி தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட உள்ளது.