ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெரியார் குறித்த பார்வையும் புரிதலும் என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இருந்ததில்லை. பள்ளிகளில் ’வைக்கம் வீரர்’ எனும் சொல், காலண்டு தேர்விலோ அரையாண்டு தேர்விலோ இரண்டு மதிப்பெண் கேள்வியாகவும் இருந்தது மட்டும் தான் இந்த மனிதரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வரையில் எனக்குள் இருந்தது.  எட்டாவது ஒன்பதாவது படித்துக் கொண்டு இருக்கும் போது, எங்கள் ஊர் டீ கடையில், அன்றைய செய்தி தாளை வாசித்துக் கொண்டு இருந்தவர்கள், பெரியார் மாவட்டம் எனும் வார்த்தையை பயன்படுத்தினார்கள். தமிழக மாவட்டங்களில் அப்படியான மாவட்டம் இல்லையே என, யோசித்துக்கொண்டே, எனது தமிழ் புத்தகத்தின் பின் பக்கம் இருந்த மாவட்டங்களில் பெரியார் மாவட்டம் என தேடி தேடி பார்த்தேன். அப்படியான பெயரோ, மாவட்டமோ இல்லை. மறுநாள் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய சமூக அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணி வாத்தியாரிடம், இது குறித்து, கேட்டபோது அவர் சொன்னார். பெரியார் மாவட்டம் என்பது நமது ஈரோடு மாவட்டம் என கூறி பெரியார் குறித்த பாடப்புத்தகத்தில் இல்லாத  சின்னச் சின்ன தகவல்களையும் கூறினார். அதன் பின்னர் வைக்கம் வீரர் என்ற பெயர் இரண்டாம் நிலைக்குச் சென்று பெரியார் எனும் பெயர் தான் மனதில் ஆழப்பதிந்தது.


அதன் பின்னர் நான் வளர வளர அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்கள் என்னுள் பெரியாரைப் பற்றிய எண்ணத்தை மதிப்பாக மாற்றியது. அப்படி நான் தெரிந்து கொண்ட தகவல்களில் ஒரு சிலவற்றை அவரது 144வது பிறந்த நாளில் பகிர்கிறேன்.


கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இனி ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ”சமூக நீதி” நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தது. ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே அறியப்படும் பெரியார் பிறந்த நாளில் ஒரு அரசு விழா கொண்டாடவிருக்கிறது என அறிவிக்கும்போது, எங்கிருந்தும் எதிர்ப்பே கிளம்பவில்லை. சமூக நீதிஎன்பது எல்லாருக்கும் எல்லாரும் சமம், உனக்குள்ள உரிமைகள் அனைத்தும் எனக்கு வேண்டும், எனக்குள்ள உரிமைகள் அனைத்தும் எல்லோருக்கும் வேண்டும் என்பதே சமூக நீதி, இதன் உருவம் தான் பெரியார்.  காரணம் பெரியார் என்பவர் எதோ ஒரு குறிப்பிட்ட தான் சார்ந்த மக்களுக்கான நலனில் மட்டும் அக்கறை கொண்டு சமூக பணி செய்தவரில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் செய்தது சமூக பணியே அல்ல, மாறாக சமூக சீர்த்திருத்தப்பணி. சுயமரியாதை என்பதே என்னவென தெரியாத மக்களிடத்தில் ஒரு சுயமரியாதைப் புரட்சியை ஏற்படுத்தியவர். பெரியாரை பற்றி இங்கு கூறப்படுவதெல்லாம், கடவுள் மறுப்பாளர், பெண் உரிமைகளுக்காக தீவிரமாக களமாடியவர் என பொதுவான கருத்துக்கள் தான். ஆனால், அது ஏன் என்று தெரிந்து கொள்ள எழுப்பபடும் கேள்விதான் மிகவும் முக்கியமானது. 


”சாமி கும்பிடுவதை மாற்ற நினைத்தவர் அல்ல பெரியார், கும்புடறேன் சாமி என்பதை மாற்ற நினைத்தவர் தான் பெரியார்”, அது என்ன கும்புடறேன் சாமி? இந்திய சமூகம், பெரும்பான்மையான இந்துச் சமூகம் என்றே கூற வேண்டும். இந்துக்களின் கடவுள் வழிபாட்டுத் தளமாக இருக்ககூடிய கோயில் என்பது, இந்துக்கள் அனைவரும் கோயிலுக்குள் சென்று கடவுள் வழிபாடு நடத்த முடியுமா என்றால், முடியாது, ஏன், தீண்டத்தகாதவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாது. ஏன் அவர்கள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது? சாதி தான் தீண்டாமையை கடைபிடிக்கச் சொல்கிறது. அப்படியானால், சாதியை கைவிட்டுவிட்டால்  தீண்டாமை ஒழிந்து விடுமா? சாதியை எப்படி கைவிட முடியும், அது முடியாத காரியம். சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் என்ன ஆவது? அப்படியானால் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் ஒழித்து விட்டால் தீண்டாமையும் சாதியும் ஒழிந்து விடுமா? அது முடியாது, சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் படைத்தவர் கடவுள். அப்படியானால் கடவுளை ஒழித்துவிட்டால் தீண்டாமையும், சாதியும், சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் ஒழிந்து விடுமா? என கேள்வி எழுப்பியதுடன்,    தீண்டாமையை உண்டு பண்ணியது கடவுள் என்றால், கடவுளை ஒழித்துவிட்டே மறுவேளை என்பதை மிகவும் உறுதியுடன் முழங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதும் அதை மக்களிடத்தில் கொண்டு சென்றவர். 


பெரியர் எனும் ஒரு சீர்திருத்தவாதி வருவதற்கு முன்னர் பெண்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய முடியாது, கல்வி கற்க முடியாது, சொத்து சேர்க்க முடியாது, சுயமரியாதையுடன் வாழ முடியாது. இதில் இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் விரும்பிய உடையை அணிய முடியாது, தலைநிமிர்ந்து நடக்க முடியாது. காலில் செருப்பு அணிய முடியாது. ஆனால் இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களும் தங்களுக்கான உரிமைகளை பெற உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றால், அது பெரியார் எனும் சமூக சீர்திருத்த மருத்துவர் தந்தை பெரியார் தான் காரணம். 


தமிழ்நாடு அரசின் இரு மொழிக் கொள்கையை தனது விழிப்புணர்வு பிரச்சார மேடைகளில் முன்னெடுத்தவர்.  தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்களைச் செய்து கொண்ட தம்பதியருக்கு, அரசு வேலையில்  வழங்கப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, சாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்களை தானே தலைமையேற்று நடத்தியவர். தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மக்கள் தனி மனித வாழ்வில், பெரியாரின் பங்களிப்பு என்பது இல்லாமல் இருக்காது. அப்படியான மனிதனின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாட்டுவது பொறுத்தமே.  தமிழகத்தில் மிகப்பெரிய பதவி வகித்திடாத ஒரு நபருக்கு தமிழக அரசே விழா நடத்த இதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்.