நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13 ஆம் தேதி கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. இந்நிலையில் அன்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து  2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்:


நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இச்சூழலில், அதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் நேற்று 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மொத்தமாக நேற்று வரை 46 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்நிலையில் இதே கோரிக்கை முன்வைத்து இன்று அமலியில் ஈடுபட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, சசி தரூர், கார்த்தி சிதம்பரம், சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.






நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது போன்ற நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.






மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டானிஷ் அலி இது தொடர்பாக கூறுகையில், “நாடாளுமன்ற ஒழுங்குமுறையை மீறியதால் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறுவது விந்தையானது. அரசாங்கத்திடம் கேள்விகள் கேட்பது எப்படி விதிமீறல் ஆகும்? இரண்டு மர்ம நபர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சரும், பிரதமர் மோடியும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.