விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார். இறுதியாக விக்கிரவாண்டி கடைவீதியில் தொடங்கிய நடைபயனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.


தொடர்ந்து அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார்:


திமுக 30 மாதங்களாக ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் சாதனைகளை கூற முடியவில்லை. பாஜகவினர் இந்தியை திணிப்பார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டை திரும்பத் திரும்பக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏழையாக திமுக அரசு மாற்றி வருகிறது. நியாய விலை கடையில் கொடுக்கப்படும் ஒரு கிலோ அரிசி 34 ரூபாய், இதில் 32 ரூபாய் மத்திய அரசின் பணம். ரூ.2 ரூபாய் மட்டுமே மாநில அரசு கொடுக்கிறது. இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு அதில் தங்கள் படங்களை ஒட்டிக் கொள்கிறது திமுக அரசு. அரசு மதுபான கடையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கலைஞர் ஸ்டாலின் படம் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர் மஸ்தான் வந்த பிறகு தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது மரக்காணம் 14, செங்கபட்டு மாவட்டத்தி 8 பேர் என, 22 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மதுபான கடை வந்த பிறகு தான் பொதுமக்களின் பணம் கரையான் அரிப்பது போல அறித்து வருகிறது. அரசு மதுபான கடை மூலம் 44 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.


அமைச்சர் பொன்முடி என்றாலே பிரச்சினைதான். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்கிறேன் என கூறிவிட்டு, சாதியை அதிகப்படுத்தியது திமுக அமைச்சர்கள் தான். சாதியை வைத்து மக்களை பிளவுபடுத்தி, மக்கள் ஒற்றுமையை குலைத்து அதில் குளிர்காயக்கூடய ஒரே கட்சி திமுக. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அப்போது 42 கோடி வங்கி வைப்பு நிதியாக இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மக்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற பணம் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. அமைச்சர் பொன்முடி பினாமி பெயரில் துபாயில் 41 லட்சத்திற்கு ஒரு நிறுவனத்தை வாங்கி, 2022-ல் அதே நிறுவனத்தை 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.


திமுக ஆட்சியில் 40% மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக திமுகவினர் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். போஸ்டர் ஓட்டுவது குலத் தொழிலாக திமுகவினர் செய்து வருகின்றனர். மூன்று மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் முதல் தலைமுறையாக வெற்றி பெற்றவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல் தலைமுறை அரசியல்வாதி ஒருவரை முதலமைச்சராகி உள்ளோம். தமிழகத்திலும் இந்த மாற்றம் வர வேண்டும். மோடி ஹிந்தியை திணிப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள் ஆனால் மோடி தமிழை தான் திணித்து வருகிறார். இவ்வாறு பேசினார்.