தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களில் பெய்த அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


நிரம்பிய நீர்நிலைகள்.. கடும் பாதிப்பில் தென் தமிழகம்




குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தைத் தாண்டி அதி கனமழை பெய்த நிலையில், கிட்டத்தட்ட இரு மாவட்டங்களிலும் ஒரே நாளில் 660 செ.மீ., மழை பெய்தது. காயல்பட்டினம் பகுதியில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 95 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதனால் ஏரி, குளங்கள், அணைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிந்து வரும் நிலையில், சாலைப் போக்குவரத்து பல இடங்களிலும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.


மீட்புப் பணிகள் தீவிரம்


இந்நிலையில் இரண்டு நாள்களுக்குப் பிறகு இன்று தான் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று முன் தினம் முதலே தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம் தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


பொருளாதார இழப்புகள் பெருமளவு இருக்கும் என அரசு அஞ்சி வரும் நிலையில், போர்க்கால அடிப்படையில், நிவாரணப் பணிகள், சாலை, மின்சார சீரமைப்புப் பணிகள் ஆகியவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


கண்டுகொள்ளாத பிரபலங்கள்




இந்நிலையில்,  சென்ற வாரம் சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் பாதிப்புகளின்போது குரல் கொடுத்தும் களத்தில் இறங்கியும் செயல்பட்ட வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள், தற்போதைய தென் தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவின் பெரும் இயக்குநர்கள் தொடங்கி சினிமா துறையினர் பலரும் தென் தமிழ்நாட்டின் படப்பிடிப்புத் தளங்களை முதன்மைத் தேர்வாகக் கொண்டு படப்பிடிப்பு நடத்துகின்றனர். மேலும் ரஜினியின் வேட்டையன் தொடங்கி கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரது படங்களும் தென் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஷூட் செய்யப்பட்டு வருகின்றன. தென் தமிழ்நாட்டில் இருந்து பல இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வெற்றி கண்டு கோலோச்சி வருகின்றனர்.


அப்படி இருந்தும் சென்னை புயல் பாதிப்புகளில் களத்தில் இறங்கி பணியாற்றியவர்கள், தென் தமிழ்நாட்டின் பாதிப்புகளுக்கு அமைதி காப்பதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் சினிமா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜின் வீடு வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து இணையத்தில் பதிவிட்டதுடன், களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் உதவி வருகிறார்.


பொது விடுமுறை


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள், உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், எ.வ.வேலு உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட சொன்னால் அது இன்னும் உபயோகமாக இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.