cyclone michaung: புயல் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் சிறு, குறு தொழில்துறையினர் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை அவகாசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மிக்ஜாம் புயல்:


மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொது மக்கள் மின்சாரமின்றி குடிநீர் வசதியின்றி, இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி தவித்து வந்தனர். இது மட்டுமல்லாமல் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடுமையாக சேதம் அடைந்தன. இதன் காரணமாக,  மக்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டது.


அதேபோல, பெரும்பாலான இடங்களில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வணிகர்களின் வியாபாரமும் முற்றிலும் முடங்கிவிட்டது.  ஒரு பக்கம் குடும்பம், மற்றொரு பக்கம் வியாபாரம் என இரண்டையும், எதிர்கொள்ளக்கூடிய  அவல  நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் பெரும்பாலான குடும்பங்களால் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.


தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம்:


இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த  டிசம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் நீடித்தது. ஆனால், இந்த உத்தரவு தொழில்துறைக்கும் பொருந்துமா? என்ற கேள்வி வணிகர்களுக்கு எழுந்தது. இந்நிலையில், மின்சாரத்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கடந்த 06.12.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மின் உபயோகிப்பார்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த மின் நுகர்வோர்களுக்கு அபராத தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.


இந்த அறிவிப்பானது முதலமைச்சரின் ஆணையின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். எனவே, மேற்கண்ட அறிவிப்பிடி, வெள்ள பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Michaung cyclone: சூறையாடிய மிக்ஜாம் புயல்! பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் எவ்வளவு? முழு விவரம் உள்ளே


கட்டுமரங்கள் முதல் இயந்திர படகுகள் வரை! மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் எவ்ளோனு தெரிஞ்சுக்கோங்க!