திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் வயது (32). இவர், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டுப் பிள்ளைகள் உள்ளனர். மேற்கு வங்கத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயகாந்த் கடந்த 4-ம் தேதி விடுமுறையில் சொந்த கிராமமான  கோனேரிகுப்பத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பழைய நண்பனை சந்திக்கச் விஜயகாந்த் சென்றுள்ளார். அப்போது மது குடிக்க விஜயகாந்த் நண்பரை அழைத்துசென்றுள்ளார். இருவரும்  மது அருந்திய பிறகு நண்பனின்  வீட்டுக்குச்  விஜயகாந்த் சென்றுள்ளார்.


 




அப்போது விஜயகாந்த் நண்பனை வீட்டில் படுக்க வைத்துவிட்டு, வீட்டில் விளையாடி கொண்டு இருந்த நண்பனின் எட்டு வயது மகளை அழைத்துள்ளார். அப்போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பாவின் நண்பர் நம்மிடம் தகாத முறையில்  நடந்துகொண்டதை புரிந்துகொண்ட சிறுமி, விஜயகாந்திடம் இருந்து தப்பி ஓடி தனது வீட்டில் இருந்த குடும்பத்தினரிடம் சென்று அந்த அங்கிள் என்னிடம் தகாத முறையில் தொடுகிறார் எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு, ஆத்திரமடைந்த குடும்பத்தினர் உடனடியாக ராணுவ வீரரிடம் தகராறில் ஈடுபட்டு நைய்யபுடைத்தனர். உடனடியாக சிறுமியின் குடும்பத்தினர் ஜோலார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ராணுவ வீரரை அழைத்து சென்று  ஒப்படைத்தனர்.  பின்னர் காவல்துறையினர் ராணுவ வீரர் விஜயகாந்திடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  ராணுவ வீரரிடம் இருந்து இரண்டு ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்தனர்.


 




 


அந்த ஒரு கார்டில், அவர் புகைப்படத்துடன் பெயர் விஜயகாந்த், தந்தைப் பெயர் சண்முகம், முகவரி கோனேரிகுப்பம் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. மற்றொரு  ஆதார் கார்டிலும் அவரின் புகைப்படத்துடன் பெயர் தாமோதரன், தந்தைப் பெயர் முனுசாமி, முகவரி ராமரெட்டியூர் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இதனால், ராணுவ வீரரின் பெயர் என்ன என்பதில்  காவல்துறையினருக்கு  குழப்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரின் கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையினர் சரிபார்த்து, இறுதியாக அவரின் உண்மையான  பெயர் விஜயகாந்த் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். எதற்காக இரண்டு ஆதார் கார்டுகளை வைத்துள்ளார். பெயர், முகவரி ஏன் போலியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, மோசடியான ஆவணங்களைக் கொடுத்து ராணுவத்தில் சேர்ந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு சந்தேக கேள்விகள் குறித்து கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.