தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை இன்று தொடங்கியது. தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், இறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைப்பு, வார இறுதி நாட்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்லத் தடை, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், மதக்கூட்டங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
எனினும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 39 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் இன்று ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக முதல்வர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தின் முடிவில் இது குறித்து முதல்வரின் விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா 2-வது அலையை சமாளிக்க தமிழகத்தில் 10 நாள் ஊரடங்கு தேவை என முதல்வருக்கு மருத்துவ பிரதிநிதிகள் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. மேலும், மீண்டும் முழு ஊரடங்கு என்றால் மக்கள் கொதித்து விடுவார்கள். கட்டுப்பாடுகளை வேண்டுமானால் அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.