சென்னை, கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஆதாரங்களுடன் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்து சுஷில்ஹரி என்ற சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாகியாக சிவசங்கர்பாபா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தன்னைத் தானே கிருஷ்ணரின் அவதாரம் என்றும், தான் கடவுள் என்றும் மக்களிடம் கூறிவருகிறார். மேலும், பல இடங்களில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றியும் வருகிறார்.
இந்த நிலையில், இவர் மீது கடந்த மாத இறுதியில் அந்த பள்ளியின் மாணவிகள் இருவர் பாலியல் புகார் அளித்துள்ளனர். அதன்படி, சிவசங்கர்பாபா பள்ளியில் உள்ள மாணவிகளிடம் தான் கிருஷ்ணரின் அவதாரம் என்றும், மாணவிகள் அனைவரும் கோபிகைகள் என்றும் கூறி அவர்களை மூளைச்சலவை செய்வதாகவும், பின்னர் அவர்களுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து அளித்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் தனது வெளிநாட்டு பயணங்களின் போது எல்லாம் ஒரு மாணவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, அந்த பள்ளிக்கு நேரில் சென்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, காவல்துறையினரும் உடன் சென்றனர். அப்போது, அங்கு சிவசங்கர்பாபா இல்லாத காரணத்தால் அந்த பள்ளி முழுவதும் சோதனை மட்டும் நடத்தினர். மேலும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், சிவசங்கர் பாபாவின் வழக்கறிஞர், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அனைவரும் 11-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டும் விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், குற்றம் சாட்டப்பட்வ சிவசங்கர் பாபா மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆஜராகி உள்ளதாகவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லாததற்கு ஆதாரமாக மருத்துவ ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களையும் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜரானவர்களிடம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். அவர்களுடைய வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!