நெல்லையில் தொடரும் அ.தி.மு.க போஸ்டர் யுத்தத்தில் கூட்டணி கட்சியான பாஜக அமைதியாக இதனை வேடிக்கை பார்த்தப்படியே தனக்கான காய்களை 'கப்சிப்' என நகர்த்திவருகிறது. பாஜக மாநில துணை தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை வைத்து முட்டி மோதி கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகிகளை பாஜகவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


ஓபிஎஸ்-சா அல்லது ஈபிஎஸ்-சா என சண்டைப்போட்டுக்கொண்டிருப்பவர்களிடம் நமக்கெல்லாம் ஒரே தலைவர் மோடி தான் என முழக்கம் இட வைத்து, அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் பணியை நயினார் நாகேந்திரன் ஏற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நாளுக்குநாள் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இடையே அதிகார மோதல் வலுத்து வரும் நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தன்வசப்படுத்தும் பணிகளில் வேட்டியை மடித்துக் கட்டி களம் இறங்கியிருக்கும் நயினார், ஏற்கனவே அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக விளங்கியதாலும், நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள வரை அனைவரையும் அறிந்து வைத்திருப்பதாலும் இந்த டாஸ்க்கில் அவர் எளிதில் ஜெயித்துக் காட்டுவார் என்றே கூறப்படுகிறது.


2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே, நெல்லையில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் நயினார் நாகேந்திரன், இவர் அதிமுகவில் இருந்தபோது, 2001 மற்றும் 2011ல் தேர்தலில் போட்டியிட்டு வென்று, அமைச்சரும் ஆனவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவில் நயினார் நாகேந்திரன் சேர்ந்தது பலருக்கு ஆச்சரியம் அளித்தது, பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், அப்போது, புதிய மாநிலத் தலைவர் ரேசில் இருந்தவர் நயினார், ஆனால், எல்.முருகனை பாஜக தலைமை மாநில தலைவராக நியமித்தது. அப்போது அதிருப்தியில் இருந்த நயினார் நாகேந்திரனை நேரடியாக போய் எல்.முருகன் சந்தித்து சமாதானம் செய்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், 2021 தேர்தலில் நெல்லையில் போட்டியிட சீட் வாங்கி ஜெயித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டித் திரிந்தவர், அதே மாதிரி  சீட் வாங்கி, வென்றும் காட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுக நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுக்கும் டாஸ்க் ஆற்றல் மிக்கவராக இவரிடம் தரப்பட்டுள்ளது.


இந்த ஒரு மாவட்டம் மட்டுமல்ல, இன்னும் பல மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு கொண்டுவரும் அசைன்மெண்ட் அந்தந்த மாவட்ட பாஜக தலைவர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதாக பகீர் கிளப்புகின்றனர். அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என்ற இரட்டை தலைமையிடையே நடைபெற்று வரும் மோதல், அதிகாரப்போட்டி இவற்றைப் பயன்படுத்தி, தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர்த்துவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக  Vs அதிமுக என்று இருப்பதை, திமுக Vs பாஜக என்ற நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் மீகத் தீவிரமாக இறங்கிவிட்டிருப்பதாகவே விவரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.