சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி கிராமத்தில் அடிப்படை வசதி மற்றும் குற்றசெயல்கள் நடப்பதால் கிராம மக்கள் வெளியேறியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தகவல் வெளியிட்டுள்ளார்.

நாட்டாகுடியில் இருந்து ஏன் வெளியேறினார்கள் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

அதில்..,” சிவகங்கை மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இலந்தங்குடி, நாட்டாகுடி, பி.வேலாங்குளம், மாத்தூர், புதுக்குடியிருப்பு மற்றும் மீனாட்சிபுரம் என 6 உட்கடை கிராமங்கள் உள்ளன. இதில், நாட்டாகுடி கிராமத்தில் மொத்தம் 56 வீடுகள் உள்ளன. அதில், சுமார் 24 வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனர். இக்கிராமமானது, மொத்தம் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இக்கிராமத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் 58 நபர்களும் மற்றும் பெண்கள் 52 நபர்களும் என மொத்தம் 110 பொதுமக்கள் வசித்தனர். இக்கிராமமானது, படமாத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியாகும். இக்கிராமத்தில், பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்களில் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். இக்கிராமத்தில், தற்போது மேற்கண்ட நபர்கள் யாரும் வசித்து வரவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இக்கிராமத்தில் இல்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், மேற்கண்ட நபர்கள் தங்களது தொழில் மற்றும் வேலைகளுக்காக கிராமத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி பகுதியான சிவகங்கை நகராட்சி பகுதிக்கு இடம்பெயர்வதற்கென அக்கிராமத்திலிருந்து சென்றுள்ளதாக, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகியவைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு வசதி என்ன?

குறிப்பாக, இக்கிராமப் பகுதிக்கு அருகில், சில சமூக விரோதிகளால் தொடர்ச்சியாக 2 கொலை செயல்கள் நடைபெற்றுள்ளதையும் அம்மக்கள் கருத்தில் கொண்டு, அச்சத்தின் அடிப்படையில் அக்கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வருகிறது. இக்கிராமம் திருப்பாச்சேத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்டதாகும். அதன்படி, அப்பகுதியில், காவல் துறையின் சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மற்றும் படமாத்தூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்படும்.

அடிப்படை வசதிகள்

மேலும், கடந்த நான்காண்டுகளில் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 6 உட்கடை கிராமங்களில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூபாய் 241 இலட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நாட்டாகுடி கிராமத்தில் மட்டும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்திடும் பொருட்டு, அதில் ரூபாய் 2 இலட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் 35 வீடுகளுக்கு 315 மீட்டர் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்தல் பணியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 12 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் நாட்டாகுடி கண்மாய் வடக்குபுறம் வரத்து வாய்க்கால் அமைத்தல் மற்றும் அகலப்படுத்துதல் பணியும், ரூபாய் 6 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் நாட்டாகுடி கண்மாயில் பாசன வாய்கால் அமைத்தல் பணியும், 15-வது மத்திய மானிய நிதியின் கீழ் ரூபாய் 2 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூபாய் 1 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூபாய் 4 இலட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் (பைப் லைன்) நீட்டிப்பு செய்தல் பணியும் மற்றும் ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்தல் பணியும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூபாய் 1 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள், ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 2 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளும் என ஆக மொத்தம் ரூபாய்  31 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்கம்பம் - சாலை வசதி

இதுதவிர, இக்கிராமத்தில் 10,000லி கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 5,000லி சிறு மின்விசை பம்பு வாயிலாக நாள்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும். இக்கிராமத்தில் 16 மின்கம்பங்கள் உள்ளன, மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் நல்ல நிலையில் இயங்குகிறது. தெருவிளக்கு பழுது நீக்கம் செய்யும் பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் அனைத்தும் ஊராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் நல்ல முறையில் இயங்கி வருகிறது. மேலும், இக்கிராமத்திற்கு செல்லும் வழியில் ஊரக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் தார் சாலையும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.

அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்

இக்கிராமத்திற்கான நியாய விலைக்கடை நாட்டாகுடி கிராமத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலந்தங்குடி கிராமத்தில் உள்ளது. அந்த நியாய விலைக்கடையின் வாயிலாக பல ஆண்டுகளாக குடிமைப் பொருட்களை பொதுமக்கள் தடையின்றி பெற்று வருகின்றனர். இதுபோன்று, நாட்டாகுடி கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதல் தேவைகள் இருப்பின், அவைகள் அனைத்தும் கோரிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.