திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

எடப்பாடி கண்டனம்:

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி. திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.

காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது? திரு. முக ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே!

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே! மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை கண்டனம்:

நேற்று இரவு தமிழகத்தில் ஒரு சிறப்பு துணை ஆய்வாளர் உட்பட சீருடை அணிந்த காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம், நம் சமூகத்தின் நெஞ்சை உருக்கும் ஒரு விஷயம். இது நம் சமூகம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதையும் காட்டுகிறது.

ஒரு குற்றவாளி அல்லது சாதாரண மனிதர், கோபத்தின் போது காவலரை தாக்கி, பொதுவில் கொல்வதற்கு என்ன காரணம்?
அவர்களுக்கு தெளிவாக தெரியும் — இவ்வளவு பெரிய குற்றம் செய்தால் தப்ப முடியாது. ஆனாலும் அவர்கள் செய்கிறார்கள். ஏன்?

முக்கிய காரணங்கள் — அரசு மதுக்கடைகள் மூலம் எளிதில் கிடைக்கும் மது, அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் (முன்பு பணக்காரர்களுக்கு மட்டுமே இருந்த போதைப்பொருள், இப்போது ஏழைகளிடமும் பரவுகிறது), மேலும் கிராமம் முதல் நகரம் வரை குறைந்து வரும் சட்ட ஒழுங்கு நிலைமை. இந்த மூன்றையும் சரி செய்தால் தான் நிலைமையை மீண்டும் சீராக்கலாம்.

காவலர்களும், குறிப்பாக துணை ஆய்வாளர் மற்றும் கீழ் பதவியில் இருப்பவர்கள், புதிய கருவிகளுடன் ஆயத்தமாக இருக்க வேண்டும். டேசர் துப்பாக்கிகள், உடல் கேமராக்கள், இந்தியாவில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், நல்ல ரோந்து வாகனங்கள், மேலும் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். இதனால் காவலர்கள் ஆபத்தான இடங்களுக்கு ஒருவராக செல்லாமல், துணையுடன் செல்ல முடியும்.

மேல் நிலை கொள்கை தவறுகள், கீழ் நிலை மக்களை நேரடியாக பாதிக்கின்றன. தமிழக உள்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உள்ள திரு @mkstalin அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி ஆக இருக்க வேண்டும்.

எஸ்.ஐ கொலை:

அதிமுக எம் எல் வின் தோட்டத்தில் பணியாற்றி வந்த மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து அவர்களது தந்தையை தாக்கியதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரமும், காவலர் ஒருவரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர், அப்போது அங்கு தகராறில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் கண்டித்துள்ளார். இதனால்அவர் மீது ஆத்திரப்பட்ட மகன்கள் இருவரும்  அருகே இருந்த அரிவாளால் எஸ்.ஐ சண்முகவேலை  சரமாரியாக வெட்டியுள்ளனர்.  இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.