தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட மேயர் பிரியா

சென்னை கோடம்பாக்கம் மண்டலம் வார்டு - 127 , சின்மயா நகர் பாலம் பகுதியில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்; கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1,2,3,9,10,11,12,13,14, ஆகிய 10 மண்டலங்கள் தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது தேர்தல் வரப்போகிறது என்பதற்காக தூய்மை பணியாளர்கள் போராட்ட களத்திற்கு வந்து சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலுக்காக இப்போது வந்து பேசுவதாகவும் , கடந்த ஆட்சி காலத்தில் 10 மண்டலங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அப்போது இந்த அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? பத்து மண்டலங்களை தனியார் மயமாக்குவதும், இரண்டு மண்டலங்களை தனியார் மயமாக்குவதும் ஒன்றா ? என்று கேள்வி எழுப்பினார்.

பணியாளர்கள் நலன் கருதி திட்டங்கள்

மேலும், பேசிய அவர், தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் தூய்மை பணியாளர்களோடு இருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் மாநகராட்சி மட்டுமல்லாமல் அரசு தூய்மை பணியாளர்கள், தனியார் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

பணியில் சேர்வதாக உறுதி

தூய்மை பணியாளர்கள் உடனடியாக வந்து பணியில் சேர வேண்டும். வேலையில் சேர்ந்த பின்னர் பணி நிரந்தரம் தொடர்பாக அரசு முடிவெடுக்கும். தூய்மை பணியாளர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் , அவர்கள் பணியில் சேர்வதாக உறுதி அளித்துள்ளார்கள் கண்டிப்பா அவர்கள் பணியில் சேர்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.