காப்பீட்டு அட்டையை கேட்டு அலைக்கழித்த அலுவலர்கள் : ஆம்புலன்ஸில் வந்திறங்கிய கொரோனா நோயாளி..

கொரோனா பாதிப்புக்குள்ளானவரை அலைக்கழித்த காப்பீடு திட்ட அலுவலர்கள் ; ஆம்புலன்ஸில்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement
கொரோனா பாதிப்புக்குள்ளானவரை அலைக்கழித்த காப்பீடு திட்ட அலுவலர்களால், ஆம்புலன்ஸில்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா நோய்தொற்றின் அலை வேகமாகப் பரவிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கைகளின் தேவை என பல்வேறு சிக்கல்களையும் தீர்வு காணவேண்டும் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இப்படி அசாதாரண சூழலில் முன்களப்பணியாளர்கள் உட்பட பலரும் தீவிரமாக பணி செய்துவரும் சூழலில், கொரோனா நோயாளியை அதிகாரிகள் நேரில் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த லாடனேந்தலை  சேர்ந்தவர் ராஜபிரபு. இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதால்  இவரது  மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிப்பட்டுள்ளார். இதனால் சிகிச்சை எடுத்துக்கொள்ள மதுரையில் உள்ள பிரபல தனியார்  மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் ராஜபிரபுவிடம் காப்பீட்டு அட்டை இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து, உறவினர் ஒருவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அலுவலரிடம் கேட்டதற்கு " கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை நேரில் அழைத்துவர அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரை ஆக்ஸிசன் வசதியுள்ள ஆம்புலன்ஸ் மூலம்  சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு அலுவலகத்திற்கு நோயாளியை அழைத்துவந்தனர். இதனை கண்ட அங்கிருந்த மற்ற அலுவலர்கள் அச்சமடைந்ததுடன் ஆட்சியருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தொற்றால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தியதுடன் அங்கிருந்த காப்பீட்டு திட்ட அதிகாரிகளிடம் இதுபோல் அழைத்துவர வலியுறுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பினார். நோயாளியை 50 கிலோ மீட்டர் தூரம் மருத்துவ காப்பீட்டு அட்டைக்காக அழைத்துவந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இது குறித்து சமூக ஆர்வலர்கள், ” உயிருக்கு போராடும் நோயாளிக்கு அரசு அதிகாரிகள் விரைவாக உதவி செய்யவேண்டும். இந்த சமயத்தில் சாமர்த்தியமாக பணி செய்யாமல், பொதுமக்களுக்கு சவாலான வேலை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? கொரோனா நோயாளியை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரியை விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்றனர்.
 
 
 
Continues below advertisement