மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 1000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


 


தமிழ்நாட்டில் கடந்த மாதம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாடு முழுவதும் மழைப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது. 



இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 11-ந் தேதி மழை தீவிரமாக பெய்தது. அன்றைய நாளில் மட்டும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது, குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் அன்றைய தினம் 44 செ.மீட்டர் மழை ஒரே நாளில் பொழிந்தது. 



சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையால் சீர்காழி நகரம் முழுவதும் மழையில் மிதந்தது. பல்வேறு இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளையும், விவசாய நிலங்களையும் நேரில் ஆய்வு செய்ததுடன் விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். இந்த சூழலில்தான், மழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.