காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்காக சைகை மொழி பாடம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


’’ Physical Fitness எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு Mental Fitness-ம் மிக மிக முக்கியம்‌. அதற்குத்‌ தேவையான பாஸிட்டிவ்‌ வைப்‌ உங்களிடம்‌ இருக்கிறது. அதனால்தான்‌ கல்லூரி நிகழ்ச்சிகள்‌ என்றால்‌ உற்சாகமாக கிளம்பி விடுகிறேன்‌.


தமிழ்நாட்டினுடைய முதல்‌ பெண்‌ முதலமைச்சர்‌ என்ற சிறப்புக்குரியர்‌‌ ஜானகி எம்‌.ஜி.ஆர்தான்‌. அவருடைய நூற்றாண்டு விழாவில்‌ கலந்து கொள்வதில்‌ நான்‌ உள்ளபடியே பெருமைப்படுகிறேன்‌. இது சிலருக்கு வியப்பாக இருக்கும்‌, அதிர்ச்சியாக இருக்கும்‌, ஆச்சரியமாக இருக்கும்‌. ஆனால்‌, வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும்‌ யாருக்கும்‌ இது அதிர்ச்சியாக இருக்காது.


தி.மு.க.வில் பங்களிப்பு:


நம்முடைய மக்கள்‌ திலகம்‌ எம்‌.ஜி.ஆர்‌ இருபதாண்டு காலம்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தில்‌ இருந்தார்‌. திராவிட முன்னேற்றக்‌ கழகத்தினுடைய சமத்துவ - பொதுவுடைமை கருத்துகளை மக்களிடம்‌ எடுத்துப்போகிற அளவிற்கு சினிமாவில்‌ ஒரு பெரிய ஹீரோவாக, உந்துசக்தியாக இருந்தார்‌. அதற்குப்‌ பின்னால்‌, காலத்தின்‌ சூழ்நிலை கருதி, காலத்தினுடைய சூறாவளி, ஒரு தனி இயக்கம்‌ அவர்‌ கண்டார்‌. அந்த இயக்கத்தைப்‌ பொறுத்தவரைக்கும்‌ அவருடைய பங்களிப்பு என்பது பதினைந்து ஆண்டுகள்தான்‌.


அந்த வகையில்‌ பார்த்தால்‌ மக்கள்‌ திலகம் எம்‌.ஜி.ஆர்‌ அதிக ஆண்டுகள்‌, அதாவது 1952-ஆம்‌ ஆண்டு முதல்‌ 1972 வரை தி.மு.க.வில்தான்‌ இயங்கிக்‌ கொண்டிருந்தார்‌. இதை அவரே சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார்‌. பல கட்டுரைகளில்‌ அவர்‌ எடுத்துச்‌ சொல்லியிருக்கிறார்‌. எம்‌.ஜி.ஆர்‌ சொல்கிறார்‌, "நான்‌ கோவையில்‌ இருந்தபோது எனது இல்லத்தில்‌ கலைஞர்‌ அவர்களும்‌ சிறிது காலம்‌ என்னோடு இருந்தார்‌, அப்போது தேசிய இயக்கத்தைச்‌ சார்ந்தவராக நான்‌ இருந்தேன்‌. ஆனால்‌ கலைஞர்‌ அவர்கள்‌ ஒரு சுயமரியாதை கொள்கை பேசுபவராக ஆஇருந்தார்‌. அவரை எப்படியாவது எனது கொள்கைக்கு இழுக்க நான்‌ முயற்சித்தேன்‌. ஆனால்‌, இறுதியில்‌ கலைஞர்‌தான்‌ வென்றார்‌. நான்‌ தி.மு.க.வில்‌ இணைந்தேன்‌. இதுதான்‌ வரலாறு."- என்று எம்‌.ஜி.ஆர்‌. எழுதி
இருக்கிறார்‌. இதெல்லாம்‌ தெரிந்தவர்களுக்கு நான்‌ இந்த நிகழ்ச்சியில்‌ பங்கெடுப்பது யாருக்கும்‌ வியப்பாக இருக்காது.




இப்போது நூற்றாண்டு விழா காணும்‌ ஜானகி எம்‌.ஜி.ஆர்‌. தமிழ்த்‌ திரையுலகில்‌ ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர்‌. எத்தனையோ தனித்திறமைகளைப்‌ பெற்றிருந்தவர்‌. இதை அவருடைய பெயரில்‌ இருக்கக்கூடிய இந்தக்‌ கல்லூரியில்‌ படித்துக்கொண்டிருக்கும்‌ மாணவிகள்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌.


* பரதநாட்டியம்‌
* மோகினியாட்டம்‌
* குச்சுப்புடி
* மணிப்பூரி
* கதக்‌ ஆகிய கலைகளை மட்டுமல்ல,


* சிலம்பம்‌ சுற்றுவதிலும்‌, கத்திச்‌ சண்டை போடுவதையும்‌ கூட அந்தக்‌ காலத்தில்‌ முறையாக பயின்றிருக்கக்கூடியவர்‌ ஜானகி‌. தமிழ்நாடு முழுவதும்‌ நாட்டிய நாடகங்களை நடத்தி பெருமைப்படுத்தியிருக்கிறார்‌.
* தமிழ்‌
* தெலுங்கு
* மலையாளம்‌
* கன்னடம்‌
* மராத்தி
* ஆங்கிலம்‌ ஆகிய மொழிகளை அறிந்தவர்.


திரையுலகத்திலும்‌, அரசியல்‌ உலகத்திலும்‌ பக்கபலமாக அவருக்கு இருந்தவர்‌ ஜானகி அம்மையார்‌. எம்ஜிஆரால்‌ உருவாக்கப்பட்ட காது கேளாதோர்‌ மற்றும்‌ வாய்‌ பேசமுடியாதோர்‌ குழந்தைகள்‌ இல்லத்தை சிறப்பாக நடத்தியவர்‌ மட்டுமல்ல - இந்த கல்லூரியையும்‌ தொடங்கியவர்‌ ஜானகி‌.


நான்‌ இங்கு வருவது முதல்‌ முறையல்ல. வரவேற்புரை ஆற்றுகிறபோது சொன்னார்‌, ஏற்கனவே நான்‌ சென்னை மாநகரத்தின்‌ மேயராக இருந்தபோது, இங்கே ஆண்டுவிழா நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சிக்கும்‌ வந்திருக்கிறேன்‌. இப்போது முதலமைச்சராக வருகை தந்திருக்கிறேன்‌. முதலமைச்சர்‌ வருகிறார்‌ என்றால்‌, கோரிக்கை இல்லாமல்‌ எந்த நிகழ்ச்சியும்‌ நடக்காது என்பது எனக்கு நன்றாகத்‌ தெரியும்‌. அந்த அடிப்படையில்‌, எனக்கு ஒரு கடிதம்‌ லதா ராஜேந்திரனால்‌ தரப்பட்டிருக்கிறது. அரசின்‌ எண்ணம்‌ எதுவோ, அதே நோக்கம்‌ கொண்டதாக இந்தக்‌ கோரிக்கைகள்‌ அமைந்திருப்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.


சைகை மொழிப்பாடம்:


சைகை மொழியை - பள்ளி மற்றும்‌ கல்லூரிகளில்‌ மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்‌ என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்‌. மாற்றுத்திறன்‌ கொண்ட மாணவர்களின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌கொண்டு சிறப்புப்‌ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்‌ என்றும்‌ கோரிக்கை வைத்திருக்கிறார்கள்‌.


மாற்றுத்திறனாளிகள்‌ துறையை முதலமைச்சர்‌ என்கிற முறையில்‌ நான்‌தான்‌ கையில்‌ வைத்திருக்கிறேன்‌. அந்த வகையில்‌ லதா ராஜேந்திரனுடைய கோரிக்கைகளை செயல்‌ திட்டம்‌ ஆக்குவோம்‌ என்பதை இந்த நேரத்தில்‌ நான்‌ உறுதியோடு தெரிவித்துக்‌ கொள்கிறேன்."


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.