அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமசந்திரன் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், தி.மு.க. தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமசந்திரனுக்கு இன்று அதிகாலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பிரச்சனை..?
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமசந்திரனுக்கு, தற்போது பல்வேறு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இருதய ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய மருத்துவக்குழு முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமசந்திரன் :
தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர் சாத்தூர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுவார். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை அடுத்த கோபாலபுரத்தில் கடந்த 1949, ஆண்டு ஆகஸ்ட் 8 ல் பிறந்தார். தனது இளம் வயதில் ‘தங்கக் கலசம் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி, படிப்படியாக எம்ஜிஆர். ரசிகர் மன்ற செயலாளராக பதவி பெற்று வளர்ந்தார். திமுகவில் அரசியல் காரணங்களால் விலகிய எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தென்தமிழகத்தில் தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தமிழக அமைச்சரவையில் மிகவும் முக்கியமானவராக உள்ளார். இதுவரை 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆறுமுறை அமைச்சராக இருந்துள்ளார். இப்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.