திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் ரெங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர்செயல் அலுவலர் ஜெயராமன்,  01.10.2019 அன்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நான் எனது முகநூலில் கோவில் முறைகேடு நடப்பதாக  பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மதஉணர்வை புண்படுத்தும் விதமான கருத்துகளை பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார்  என் மீது வழக்கு பதிவு  செய்துள்ளனர். காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
  தமிழகம் கோவில்களின் நகரம். கோவில்கள் நமது  கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழமையான கோவில்களின்  பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள் தனியாரால் அபகரிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. கோவில் பணியாளர்களுக்கு குறைவான  ஊதியம்  வழங்கப்படுகிறது.  

 



 

கோயில்களை யார்  நிர்வகிப்பது என்ற  ஒரு அடிப்படைப் பிரச்சினை வேறு உள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரலின் கீழ்  இருக்க வேண்டுமா? தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அதே அளவு, நிலைபாட்டை  கோவில்கள் மீதும் கடைபிடிக்க  வேண்டும் என்று வாதிடுவது நியாயமானது தான். ஏனென்றால்  மனுதாரர் ஒரு தீவிரபக்தர் மட்டுமல்ல, ஆர்வலரும் கூட. அவரது நம்பிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை. 

 

அதே வேளையில், சில சமயங்களில் மனுதாரர் நடந்துகொண்டிருக்கும் விதம் கோவில் நிர்வாகத்திற்கு  சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்குவாதம், விவாதம்  எப்போதும்  உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இது தான் நாகரீகம். மனுதாரர் இதை உணர வேண்டும். மனுதாரர் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.