விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷெரீப்.  இவர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் தீவிர விசுவாசியாக இவர் பயணித்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவை தலைமை ஏற்க வாருங்கள் என்று கூறி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார்.


இதுகுறித்து திண்டிவனம் பகுதியில் இருக்கக்கூடிய அதிமுகவினர் கூறியதாவது: திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய சலவாதி பகுதியில் முகமது ஷெரீப்பின் டீ டைம் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை செல்லும்போதெல்லாம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த கடைக்கு சென்று டீ அருந்தி செல்வது வழக்கம். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய ஷெரீப் விழுப்புரம் மாவட்டதை இரண்டாக பிரித்து வடக்கு  மாவட்ட செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 



இது குறித்து சி.வி.சண்முகம், ஷெரீப்பிடம் பேசிய நிலையில் ஷெரீப் முன்னுக்குபின் முரணான பதிலை தந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஷெரீப் கவுன்சிலர் சீட் கேட்ட நிலையில்,  அடுத்த முறை வாய்ப்பு வழங்குவதாகவும் தற்பொழுது களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால் முகமது ஷெரீப் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை, இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவை சந்தித்து அதிமுகவை காப்பாற்றுங்கள் என விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து கொண்டு சென்றார் முகமது ஷெரீப் இதனால் தற்பொழுது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.




அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, தியாகராயநகர் இல்லத்தில், திண்டிவனம் முன்னாள் நகரக்‍ கழகச் செயலாளரும், திண்டிவனம் அர்பன் வங்கித் தலைவருமான திண்டிவனம் கே. சேகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவருமான முகமது ஷெரீப், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், தலைமைக்‍ கழக பேச்சாளருமான எம். தம்பி ஏழுமலை, நகர சிறுபான்மை பிரிவுச் செயலாளர்  மஸ்தான், திண்டிவனம் மாவட்டக் கழக பிரதிநிதி ஸ்ரீதர் சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.