தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  முதலமைச்சராகப் பதவியேற்றபின் தேர்தல் பரப்புரையின்போது தான் பெற்ற மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் விதமாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்கிற சிறப்புத்துறையை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரது முதல்நாள் முதல் கையெழுத்தில் ஒரு அம்சமாக இந்தத் துறைக்கான சிறப்பு அதிகாரி நியமனமும் இருந்தது.  தலைமைச் செயலகத்தில் சிறப்பு அலுவலகமாக இந்தத்துறை இயங்கும். இந்தப் பொறுப்பில்தான் தற்போது ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார்.

 

யார் இந்த ஷில்பா பிராபகர்?

 



திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்


 

ஷில்பா பிரபாகர் சதீஷ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பவர். 2009-ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று 2009-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் 46-வது இடத்தைப் பெற்றவர். 2010-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கியவர், வேலூர் சார் ஆட்சியர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.



 

2018-ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராகப் பணியில் அமர்ந்தார். பாளையங்கோட்டையிலுள் உள்ள அங்கன்வாடி மையத்தில் தனது மகளைச் சேர்த்து மாநிலத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


'குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியும். எனது குழந்தையுடன் விளையாடுவதற்கு அவளது வயதுக்கு ஏற்ற பிள்ளைகள் யாருமில்லை. மேலும் நமது மாவட்ட அங்கன்வாடிகள் சிறந்த விரிவாக்க வசதிகளுடன் நல்ல முறையில் இயங்கிவருகிறது. ஒரு அரசு அதிகாரியாக நானே எனது பிள்ளையை அரசு அங்கன்வாடியில் சேர்க்கவில்லையென்றால் பிறகு எப்படி மற்றவர்கள் முன்வருவார்கள்? எனது மகள் தற்போது ஆர்வத்துடன் தினமும் அங்கன்வாடிக்குச் செல்கிறாள்’ என அவர் தனது இந்தச் செயல் குறித்துப் பகிர்ந்திருந்தார். 



 

’கெத்து’ காட்டிய ஷில்பா பிராபகர்  

 

நெல்லையில் அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் என அனைவரையும் தனது அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தங்கள் வேலைகளை சரிவர செய்யாத நெல்லை மாவட்ட கிராம அதிகாரிகளுக்கு தொலைபேசியில் ’ரெய்டு’ நடக்கும். அதன் ஆடியோவும் இணையத்தில் வைரலாக மாறியது. இதன் மூலம் நெல்லை மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

 

மேலும் அரசு அதிகாரிகள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த பொறுப்புகள் உண்டு,  இந்த கடமைகள் உண்டு என்று கோடிட்டுக்காட்டி செயல்பட்டு வந்தது மட்டுமில்லாமல் அதனை தன் பணியில் சிறப்பாய் கடைபிடித்து செய்து வந்தார்

 

தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு நேரடி அலுவலராக ஷில்பா நியமனம் செய்திருப்பது பல்வேறு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பொறுப்பான வேலைக்கு பொறுப்பான அதிகாரி தான் என்று நெல்லை மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.