பாலியல் புகார் அடிப்படையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த மே 28-ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவலர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 


சென்னை நந்தனத்தை சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன். இவர் ஜிஎஸ்டி அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனியாக ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்னும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.அண்மையில் இவர் நடத்திவரும் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீராங்கனை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, பூக்கடை காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜன் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்தனர்.


இதனையடுத்து, கடந்த மே 28-ம் தேதி நாகராஜன் கைது செய்யப்பட்டு போக்சோ நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்க கோரி நாகராஜன் தாக்கல் செய்த மனு, நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையடையாத காரணத்தாலும் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


மேலும், பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை ஆணையர், எண்ணிற்கு (9444772222)  தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் வெளியே தெரியாமல், ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   



இந்நிலையில்,பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் ஆறு வீராங்கணைகள் புகாரளித்திருகின்றனர். இதனையடுத்து,  நாகராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவலர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 


முன்னதாக, கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற மறைந்த அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த ஜூன் 10-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.



ஆனால், கடந்த ஜூன் 25ம் தேதி, கிஷோர் கே. சுவாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது தமிழ்நாடு காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதேசமயம், சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் குண்டர் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Goondas Act: ‛குண்டாஸ்’ என்றால் என்ன? குண்டர் சட்டம் பாய்ந்தால் என்ன ஆகும்?