தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாயமான் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார் கருப்பசாமி அதே பகுதியை சேர்ந்த சாராள் என்ற பெண்ணை கடந்த ஒராண்டு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். சாராளுக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தால் கருப்பசாமி தன் மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். துணிகடையில் மாதம் ரூ.8000 சம்பளம்  வாங்கினாலும் இருவருமே வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்து கொண்டு பல காதல் தம்பதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தனர். பின்பு சாராள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு அம்மா அப்பா இல்லாததால் வளைகாப்பு நடைபெறவில்லை .

 



 

இந்த சூழ்நிலையில் திடீரென சாராளுக்கு பிரசவவலி ஏற்பட்டதால் கருப்பசாமி சாராளை நெல்லை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.  ஆனால் பிரசவம் தாமதமாகும் எனவும் அதுவரை இங்கேயே சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், தனது காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் கருப்பசாமி மனதை பாதித்துள்ளது.  தன் மனைவியின் ஆசைகளை பிரசவ வார்டில் உள்ள செவிலியர்களிடமும், அங்கு பணி புரியும் ஊழியர்களிடமும் கருப்பசாமி தெரிவித்தார். கர்ப்பமான பெண் என்பதாலும், தாய் தந்தை இல்லாத பெண் என்பதாலும் செவிலியர்களுக்கு சாராள் மீது அன்பும் கனிவும் ஏற்பட்டது.

 



 

வளைகாப்பு நடத்த தேவையான பொருட்கள் வாங்க நாங்களும் பணம் தருகிறோம் உடனே சென்று பொருட்களை வாங்கி வாருங்கள், பிரசவ வார்டில் வைத்தே சாராளுக்கு நாங்களே அம்மாவாகவும், சகோதரியாகவும் இருந்து வளையல் போட்டு விடுகிறோம் என்று செவிலியர்கள் கூற உடனே மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்ற கருப்பசாமி வளைகாப்பு நடத்த தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

 


 

எப்படியாவது மருத்துவமனையில் வைத்து எளிய முறையில் சாராளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கருப்பசாமி முடிவெடுத்தது மட்டுமில்லாமல் உடனே தனது ஆசையை நெல்லை பிரசவ வார்டில் உள்ள மருத்துவர்களிடமும், ஊழியர்களிடமும் கூறும்போது அவர்களும் பச்சைக் கொடி காட்டியது அவரை ஆனந்த கண்ணீரில் தள்ளியது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு விழாக்கோலம் பூண்டது. வளைகாப்புக்கு தேவையான பூ, வளையல்கள் ஆகியவற்றை கருப்பசாமி வாங்கி வந்தார்.  செவிலியர்கள் மற்றும் பிரசவ வார்டில் உள்ள பெண்கள் முன்னிலையில் சாராளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. வீட்டில் அம்மா அப்பா உறவினர்கள் இருந்தால் எப்படி நடக்குமோ அதில் எள் அளவும் குறை இல்லாதது போன்று உரிய வழக்கப்படி செவிலியர்கள் மிகுத்த பாசத்துடன் சாராளுக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம் குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளனர்.



 திடீர் இன்ப அதிர்ச்சியாக தனக்கு நடந்த இந்த வளைகாப்பு எண்ணி சாராளும் ஆனந்த கண்ணீர் விட்டார். பிரசவத்திற்கு வந்த இடத்தில் அரசு மருத்துவமனையில் வைத்து தனது காதல் மனைவியின் வளைகாப்பு ஆசையை நிறைவேற்றிய கருப்பசாமியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அம்மா அப்பா இல்லாத பெண்ணின் ஆசைகளை நிறைவேற்றிய மருத்துவர்கள், செவிலியர்களையும், அங்கிருந்த பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்