செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி கைது:
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்படும்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
மாறுபட்ட தீர்ப்பு:
அதில் நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நாளை ஒத்திவைப்பு:
பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட வர உள்ளதால் வழக்கை செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து 3வது நீதிபதி சி.வி கார்த்திகேயன் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார். வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா எனவும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு தகுந்ததா எனவும் 3வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.
மேலும் படிக்க