நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என  சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்துளித்துள்ளது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத்  76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில்  எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் அவரது வேட்புமனுவில் , சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்ததாக, தேனி தொகுதி வாக்காளராக உள்ள மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


அதில் பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.  ஆனால் தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா அதிகம் நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார். அதேசமயம் இது தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை ஏற்கக்கூடாது எனவும் ரவீந்திரநாத் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரவீந்திரநாத் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 


தொடர்ந்து மிலானி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின்போது ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் தேர்தல் அதிகாரிகள் முன்பும் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார். இதனிடையே இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பளித்துள்ளார்.


இதன்மூலம் அதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘கால தாமதம் ஆனாலும் நீதி வென்றுள்ளது’ என கூறியுள்ளார். இதனிடையே ஓ.பி.ரவீந்திரநாத் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.