ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிரேஸ் அதிகம். கடந்த ஆறு சீசன்களாக அமோக வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
பிக் பாஸ்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாகி விடுகிறார்கள். அவர்களின் மார்க்கெட்டும் நிகழ்ச்சிக்கு பிறகு எகிறி விடுகிறது என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் விருப்பப்படுகிறார்கள். கடந்த ஐந்து சீசன்களை காட்டிலும் ஆறாவது சீசன் சண்டை சச்சரவிலும் சரி டைட்டில் வின்னர் அறிவிப்பிலும் சரி ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள் பலரால் அசீம் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உலக நாயகன் என தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனை முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் முன்னிலையில் நிறுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் இத்தனை வரவேற்பு கிடைப்பதற்கு அவர் தான் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. கடந்த ஆறு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போலவே இந்த சீசனையும் அவரே தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. மேலும் இந்த சீசன் போட்டியாளர்களாக யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்ற தகவல் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமான லிஸ்ட் இதுவரையில் வெளியாக வில்லை.
ப்ரமோ ஷூட்:
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ ஷூட் நேற்று நடைபெற்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ப்ரோமோ ஷூட் முடிந்துவிட்டது என்றால் நிகழ்ச்சியும் விரைவில் துவங்கிவிடும் என பலரும் மனக்கணக்கு போட்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் விரைவில் துவங்க உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரைவில் தொடங்கி முடிக்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ப்ரோமோ ஷூட் முடிந்து விட்டது என்றாலும் விரைவில் நிகழ்ச்சி துவங்குமா? என்பதில் சந்தேகம் தான் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் இந்த ப்ரோமோ ஷூட் முன்னரே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் தீம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த விவரமும் ஒரே சஸ்பென்ஸாகவே உள்ளது. கமல்ஹாசன், தி.மு.க கட்சியுடன் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதனால் அரசியல் சார்ந்த தீம் கூட இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் துவக்கம் குறித்தும் அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் லிஸ்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.