அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ்(Senthil Balaji Dismissed) செய்வதாக ஆளுநர் ஆர்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது:
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், அதிமுக ஆட்சி காலத்தில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை அவரை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.
கைதை தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறிய நிலையில், அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செந்தில் பாலாஜியை கைது செய்ததது சட்ட விரோதம் எனக் கூறி, அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதேநேரம் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரியும், அவரை விசாரணைக் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உயர்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர ஆளுநர் எதிர்ப்பு:
இதற்கிடையே, செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த சூழலில், செந்தில் பாலாஜியை அமைச்சராக நீக்கி ஆளுநர் உத்தரவிட்டிருப்பது பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சட்ட நிபுணர்கள் கூறி வரும் நிலையில், திமுக அடுத்து என்ன செய்ய போகிறது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் உதவியை திமுக நாடும் என்றும் கூறப்படுகிறது. சமீப காலமாக, மாநில அரசுகளின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.