தமிழ்நாட்டின் காவல்துறை தலைவர் எனப்படும் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகிப்பவர் சைலேந்திரபாபு. இவரது பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் நியமிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள அதே நேரத்தில், சென்னை மாநகராட்சியின் புதிய காவல் ஆணையர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான சென்னையின் காவல் ஆணையர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர் உள்ளது.


1.டேவிட்சன் ஆசிர்வாதம்:


தமிழ்நாட்டின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவர் டேவிட்சன் ஆசிர்வாதம். உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்த இவரது பெயரே சென்னையின் புதிய காவல் ஆணையர் பெயர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது இவர் ஆணையராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு பெரும் அளவில் பின்னுக்கு சென்றுள்ளது.


ஏனென்றால், மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகித்தபோது போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக உள்ள குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், இவரை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து காவல் தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இதனால், இவர் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு ஆகும்.



  1. சந்தீப்ராய் ரத்தோர்:


சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கான போட்டியில் இரண்டாவதாக இருப்பவர் சந்தீப்ராய் ரத்தோர். தற்போதைய சூழலில், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட சந்தீப்ராய் ரத்தோருக்கே வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி நகர முதல் காவல் ஆணையராக இருந்தார். இவர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளார்.



  1. ஆபாஷ்குமார்:


ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவர் ஆவார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை டி.ஜி.பி.யாக தற்போது பொறுப்பு வகிப்பவர் ஆபாஷ்குமார். இவர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாகவும், தமிழக ஆளுநரின் பாதுகாப்பிற்கான கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், மதுரை காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.  இவர் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அமலாக்கத்துறை விசாரணை காரணமாக டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்பதால், சந்தீப்ராய் ரத்தோருக்கும், ஆபாஷ்குமாருக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் சந்தீப்ராய் ரத்தோரே புதிய சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றே காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.