ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவிநீக்கம் செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


நாளை பதில்:


“ ஆளுநரின் நடவடிக்கை சட்டப்படி செல்லுமா? செல்லாதா? என்பதை வழக்கறிஞர்கள் சொல்வார்கள். நிச்சயமாக சொல்கிறோம் ஒரு அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும், வேண்டாம் என்பதும் முதலமைச்சரின் முடிவுதான். இது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்.


ஆளுநரை பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. ஆளுநர் தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று தெரிந்து கொண்டு செய்கிறாரா? இல்லையா? யாருடைய ரப்பர் ஸ்டாம்பராக இருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை. எனவே, அவர் இன்றைய தினம் எடுத்துள்ள முடிவிற்கு நாளைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தக்க பதில் தருவார். ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றுதான் நாங்களும் கூறுகிறோம்.


ஆளுநர் விருப்பம் அல்ல:


நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? என்பது 2024ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். ஒரு ஆளுநருக்கு தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, இல்லை என்று தெரிந்து கொள்ள முடியாதபோது அதிகாரம் இல்லை என்று ஆட்சியில் இருப்பவர்கள் சொல்கிறோம்.


எங்களுடைய அறிவுரைப்படிதான் அவர் செயல்பட வேண்டும். ஆனால், அவர் நான் ஒருவரை நீக்குவதற்கு உரிமைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதெல்லாம் கிடையாது. அமைச்சரவையில் ஒருவரை வைத்துக்கொள்வதும், வைத்துக் கொள்ளாததும் முதலமைச்சரின் விருப்பமே தவிர ஆளுநரின் விருப்பம் அல்ல.


சர்வாதிகார நாடா?


ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஆளுநர்களும் ஒவ்வொருவரையும் விலக்குவேன் என்று சொன்னால், ஒவ்வொருவரையும் நீக்க முடியுமா? இது ஜனநாயக நாடா? இல்லை ஆளுநரின் சர்வாதிகார நாடா? அ.தி.மு.க. போன்ற பா.ஜ.க.விற்கு அடிமையாக இருக்கக்கூடிய கட்சிகள் மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே மிரட்டி பணிய வைக்க வேண்டிய பணியை மட்டுமே செய்யும். அது ஏவல்துறையாக இருக்குமோ தவிர காவல்துறையாகவோ, பாதகாப்பு துறையாகவோ இருக்காது.


அமலாக்கத்துறை நிலுவையில் உள்ள வழக்குகள் நன்றாக தெரியும். யாரும் அமலாக்கத்துறைக்காக பயப்பட போவதில்லை. நீதிமன்றம் இருக்கிறது. நீதிமன்றத்தில் இன்னும் நீதி இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் அனைத்து மக்களும் உள்ளனர். எனவே, அமலாக்கத்துறையை பொறுத்தவரையில் ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருப்பவர்களை கை வைக்க மாட்டார்கள்.


விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆவணங்களை வெளியில் வீசினார். அன்றைக்கே கைது செய்திருக்க வேண்டும். அன்று ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆனால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.”


இவ்வாறு அவர் கூறினார்.   


பெரும் பரபரப்பு:


அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆளுநர் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்த நிலையில் தற்போது ஆளுநர் அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Senthil Balaji Dismissed: அதிகாரமில்லை...செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு சவால் விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...!


மேலும் படிக்க: Senthil Balaji Dismissed: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்!