செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, செந்தில் பாலாஜி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பினர். வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் மனுதாரர் எவ்விதத்தில் பாதிப்படைகிறார்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி தொடர்பான முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உள்ளிடோரின் மனுக்களும் ஒத்தி வைக்கப்பட்டன. 


முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீனை செய்ய முடியாது. நீதிமன்றம்தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மனுவில் கோரி இருந்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில், 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.


இதனிடையே ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றக் காவல் கடந்த 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், காவலை ஜூலை 12-ம் தேதி வரை மேலும் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.