அணு முதல் அண்டசராசரம் வரை அறிவியல், கணிதம் என அனைத்து துறைகளிலும் தேர்ந்த அறிஞர் போல் சொற்பொழிவுகள் ஆற்றியபடியும், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து நாள் தவறாமல் தன் பக்தகோடிகளுக்காக பூஜைகள் நடத்தியவாறும் வலம் வந்த கைலாசா அதிபர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தாவின் சமூக வலைதளப் பக்கம் கடந்த சில மாதங்களாக முடங்கியது.


தனித்தீவில் கவலைக்கிடமாய் நித்தியானந்தா...


இந்தியாவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நித்தியானந்தா கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியதாகவும், தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும் என்றும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென்றும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.


இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக அவ்வபோது அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவாற்றி வருகிறார் நித்தியானந்தா.


உடல்நிலை குறித்து விளக்கம் 


இந்தசூழலில், கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக செய்திகள் பரவின. இதனால் உலகம் முழுவதும் உள்ள இவரது பக்தர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிய நிலையில், தான் மரணிக்கவில்லை என தனது முகப்புத்தகத்தில் தன் கைப்பட எழுதிய  கடிதத்தைப் பகிர்ந்தார்.


மேலும் தன் உடல் நிலை குறித்த அறிக்கை ஒன்றையும் பகிர்ந்த நித்தியானந்தா, தன் இதயம் 18 வயது இளைஞரின் இதயம் போல் ஆரோக்கியமாக உள்ளது என்றும், தன்னால் உணவும் மட்டுமே உட்கொள்ள முடியவில்லை என்றும் வேறு எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.


மீண்டும் லைவ் தரிசனம்


இந்நிலையில், சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு நாளை ஜூலை 13ஆம் தேதி குரு பூர்ணிமா நாளில் நித்தியானந்தா லைவ் தரிசனம் தரவிருப்பதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது.


கடந்த மாதம் இதே நேரம் நித்தியானந்தா ஜீவ சமாதி அடைந்து விட்டதாக தகவல் பரவு உலகம் முழுவதும் உள்ள அவரது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி வெளியாகி உள்ளது.


 






சிலையால் பரபரப்பு


முன்னதாக விழுப்புரம் மாவட்டம், பெரம்பை ஐஸ்வர்யா நகரில் உள்ள முருகன் கோயிலில் நித்யானந்தாவை சிவன் போல் சித்தரித்து கையில் சூலத்துடன் வைக்கப்பட்டுள்ள 18 அடி உயர சிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இச்சிலை சிவனின் அவதாரங்களுள் ஒன்றான கால பைரவர் சிலை என கோயில் தரப்பினர் முதலில் மழுப்பிய நிலையில், கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் நித்தியானந்தாவின் தீவிர பக்தர் என்பது தொடர்ந்து கண்டறியப்பட்டது.