பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி தந்த பொற்கால ஆட்சி போல் அடுத்து நம் ஆட்சி அமையும் என்று தஞ்சையில் சசிகலா சூளுரைத்தார்.

 

தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுக உடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று சசிகலா பேசியதாவது: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையும், குழப்பங்களும் ஏற்பட்டது. நானோ, விதி வசத்தால் பெங்களூரில் சிறைப்பட்டு இருந்தேன். அதன் பிறகு பல்வேறு சூழ்ச்சிகள், துரோகங்கள் அரங்கேறியது. இதன் காரணமாக, கட்டுக்கோப்பாக இருந்த நம் இயக்கம், எதிரிகளின் ஆசைப்படி சிதறிப்போனது.

 

அம்மாவின் தொண்டர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்து நின்று செயல்பட்டாலும், அனைவரும் நம் இரு பெரும் தலைவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வந்துள்ளார்கள். யாரும் திமுகாவிற்கு ஓடிவிடவில்லை. ஆதாயம் தேடி ஒருவர், இருவர் சென்று இருக்கலாம். அவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்கள் வேடந்தாங்கல் பறவைகள் போல் வெவ்வேறு இடத்திற்கு தொடர்ந்து பயணிக்கக் கூடியவர்கள்.

 

அவர்களால், யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. எத்தனையோ சோதனைகள் வந்து சோதித்து, எதற்கும் அசராமல், நம் இருபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் தொடர்ந்து கடைபிடித்து, "அம்மா" என்ற ஒற்றை வார்த்தைக்கு இன்றுவரை கட்டுப்பட்டு, மக்கள் பணிகள் ஆற்றுகின்ற உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

 

புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, எத்தனையோ பேர் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களை, கட்சியின் நலன் கருதி, நாம் மீண்டும் ஒன்று சேர்த்து இருக்கிறோம். அதே அடிப்படையில் தான், அம்மா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட காலசூழல்களால் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டுள்ளோம்.

 

புரட்சித்தலைவர் அவர்களின் மறைவுக்கு பிறகு நம் கட்சி சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அன்றைக்கு அதிமுகவிற்கு, இனி எதிர்காலம் இல்லை, அதிமுகவின் கதை முடிந்துவிட்டது, என்றெல்லாம் சொன்னார்கள். கருணாநிதியும் இதே கனவோடு தான் அன்றைக்கு இருந்தார். ஆனால் என்ன நடந்தது? கருணாநிதி அவர்கள் கண்ட கனவை மொத்தமாக கலைத்தோம். இது நம்மால் எப்படி சாத்தியப்பட்டது. ஒரு பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை, நான் தெளிவாக கற்று கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்த பிறகு, அனைவரையும் நம் கட்சிக்காரர் என்று மட்டும் தான் பார்த்தோமே தவிர, இவர் இந்த அணியைச் சேர்ந்தவர், அவர் அந்த அணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் வேற்றுமைப்படுத்தி ஒரு நாளும் பிரித்து பார்த்ததில்லை. இதை நாங்கள் கற்று கொண்டது புரட்சித்தலைவரிடம் தான். அவர் அனைத்தையும் கற்று தேர்ந்தவர். ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெரியாது. யாரையும் பிரித்து பார்க்கமாட்டார். அனைவரையும் சமமாகவே பார்ப்பார். நாங்கள் அன்றைக்கு கடைப்பிடித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். வாழ்க்கையில், சிறுவயதிலிருந்தே, மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வந்துவிட்டது. கழகத்திலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்தே பழக்கப்பட்டுவிட்டேன். எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் இலட்சியமாக கருதுகிறேன். 

 



 

 

எத்தனை பிரிவுகளாக பிரிந்து நின்றாலும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பதுதான். நம் அனைவருடைய எண்ணமும், அதிமுகவை வலிமைப்படுத்தி, அதை மீண்டும் அதே பழைய நிலைக்கு கொண்டு வந்து, கழக ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றுவதுதான் நம் அனைவரிடத்திலும் இருக்கின்ற ஒரே குறிக்கோள்.

 

இதை மனதில் வைத்து தான், அனைவரையும் ஒருங்கிணைத்து, தமிழகத்தில் அதிமுக தான் ஒரே வலிமையான கட்சி என்ற நிலையை அடைகின்ற உன்னதமான பணியை மேற்கொண்டு வருகிறேன். அதேபோன்று பெங்களூரிலிருந்து வந்த நாள் முதல், இன்று வரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தைத்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். நான் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று பேசுபவள் அல்ல. நான் என்றைக்கும் சொன்ன சொல் மாறாமல் நடந்து கொண்டு இருக்கிறேன். இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு அனைவரும் என்னுடன் தோளோடு தோள் கொடுத்து நம் இயக்கத்திற்கு வலு சேர்ப்போம். அதன் தொடக்கமாகத்தான், திவாகரன் தலைமையில், "அண்ணா திராவிடர் கழகம்" என்ற தனி அமைப்பாக இதுநாள் வரை செயல்பட்டு வந்ததை, எனது தலைமையிலான அதிமுகவை வலிமைப்படுத்தும் வகையில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள். இதே போன்று இன்னும் பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கும், அனைவரையும் ஒன்று சேர்த்து, சேர்த்து, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன். நாமெல்லாம் நன்றிக்காகவும், விசுவாசத்திற்காகவும் துணை நின்றவர்கள். துரோகங்களை வேரறுத்து, தியாகங்களை மட்டும் இதுநாள் வரை செய்து வந்து இருக்கிறோம். அம்மாவை நம் கண்களின் இமை போல கடைசி வரை பாதுகாத்து வந்தவர்கள் நாம். எனவே அதிமுகவை காப்பாற்றுவதிலும் இன்றைக்கு நமது பங்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. "எங்களுடைய செயல்பாடுகள், எங்களுடைய திட்டங்கள், எல்லாமே மக்களுக்காகத்தான், எங்களை பொறுத்தவரை எந்த சுயநலமும் இல்லை, பொதுநலம் தான், மக்கள் நலம் தான். நான் இருக்கின்ற வரை இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று ஜெயலலிதா சட்டசபையில் பேசினார்.

 

அன்றைக்கு அவர் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. இதை நிறைவேற்றுவது தான், நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாக எண்ணி, அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக நின்றால், கண்டிப்பாக இயக்கம் நூற்றாண்டுகள் என்ன, அதற்கு மேலும் நிலைத்து நிற்கும். நம் எதிரிகளின் கனவு கனவாகவே போகும். 

 

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் வழிப்பாதையில் நானும் தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கிறேன். மக்கள் அதிமுகவை கண்ணியம் நிறைந்த இயக்கமாக பார்த்தார்கள் இவர்களை ஆதரித்தால் நமக்கு நியாயமான ஆட்சி அமையும் ஆதரித்தார்கள். நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் மனதுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா? ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நான் பெரியவன், நீ பெரியவன் என்று போட்டி போட்டு கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்? இதனால் அதிகம் பாதிப்படைவது அப்பாவி தொண்டர்கள் என்று நினைக்கும் போதுதான், என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

 



 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடந்த பொதுக்குழுக்கள் தான் உண்மையான பொதுக்குழு. கட்சி சட்டத்திட்ட விதிகளின்படி முறையாக அழைப்பு கொடுத்து சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. அதன்பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழுக்கள் அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள். அதிமுக வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்ட விதிகளை யாரும் இப்படி மாற்றியது இல்லை. இது மிகப்பெரிய கேவிக்கூத்தாக இருக்கிறது. இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. விரைவில் ஒரு நல்ல தீரவு ஏற்படும். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அப்படியே விட்டுவிட முடியாது. எத்தனையோ சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் வென்றெடுத்த இந்த இயக்கம், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்ச்சி வலையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடும். நான் மேற்கொண்டு வரும் புரட்சிப்பயணமே அதற்கு சாட்சியாக இருக்கிறது. நான் இருக்கின்ற வரை யாராலும் இந்த இயக்கத்தை அபகரித்துவிடவோ, அழித்துவிடவோ முடியாது விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் நம் இயக்கம் புது பொலிவு பெறும் என்று உறுதியளிக்கிறேன். திமுகவினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் அது நிறைவேறப் போவது இல்லை. தமிழக மக்கள் திமுகவினரை தள்ளி வைக்க தயாராகி விட்டார்கள். அடுத்து அமைய போவது நமது ஆட்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண