"ஜனநாயக அமைப்பில், பெரும்பான்மையினரின் விருப்பமே ஏற்று கொள்ளப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களிடையே மாற்று கருத்து நிலவும் போது, பெரும்பான்மையினரே முடிவுகளை எடுப்பர். கட்சியின் உள்விவகாரங்களில் பெரும்பான்மையினர் ஒரு முடிவு எடுக்கும்போது, நீதிமன்றம் அதில் தலையிடாது" என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்திற்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவாக அமைந்தது. "ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள ஒரு தலைவர், பொதுக்குழுவில் கலந்து கொண்டு கட்சி நலன் சார்ந்து தனது யோசனைகளையும் திட்டங்களையும் வழங்கி கட்சியினரின் நம்பிக்கையை பெறாமல், நீதிமன்றத்தை அடிக்கடி நாடுவது துரதிஷ்டவசமானது" என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதிமுகவில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோருக்கிடையே அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறு யாரையும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அதிமுக தற்போதும் என்னிடம்தான் இருக்கிறது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மத்தியில், இன்று காலை வங்கிக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இனி வரவு செலவு கணக்குகளை அவர் கவனிப்பார் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த அதிகார போட்டியில், கட்சி சின்னம், சொத்துகள் ஆகியவை முடக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அப்படி, முடக்கப்பட்டால் கட்சி யாருக்கும் சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.
கட்சியில் அதிகார போட்டி ஏற்பட்டு கட்சி சின்னம் முடக்கப்படுவது இந்தியாவில் பல முறை நிகழ்ந்துள்ளது. இந்த சூழ்நிலைகளில் எல்லாம், தேர்தல் ஆணையம் தான் கட்சி யாருக்கு சொந்தம் என்பதை தீர்த்து வைத்துள்ளது. அந்த வகையில், முன்னுதாரணமாக, மூன்று நிகழ்வுகளை சுட்டி காட்ட வேண்டியிருக்கிறது.
ஜெயலலிதா vs ஜானகி
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலிலதா, ஜானகி ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் அக்கட்சியில் உருவாகின. இதன் காரணமாக, கட்சி சின்னம் முடக்கப்பட்டு, இரண்டு அணிகளும் தனித்தனியே போட்டியிட்டன. சட்டப்பேரவை தேர்தலில், ஜானகி அணியை காட்டிலும் ஜெயலலிதா அணி அதிக தொகுதிகளில் வென்றதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து கட்சியை ஜெயலலிதாவிடம் விட்டு கொடுத்தார் ஜானகி. தேரதல் ஆணையம் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு, பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால், இதுபோன்ற சூழல் தற்போது நடைபெறுமா என்பது கேள்விக்குறியே?
ஜெயலலிதா vs திருநாவுக்கரசு
கடந்த 1994ஆம் ஆண்டு, ஜெயலலிதா - திருநாவுக்கரசர் ஆகியோருக்கிடையே அதிகார போட்டி வெடித்த நிலையில், இப்பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையத்திடம் சென்றது. அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்களில் ஆகியோரின் ஆதரவு இருவருக்குமே சரிசமமாக இருந்தது.
கட்சியின் பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் திருநாவுக்கரசர் கணிசமான ஆதரவை பெற்றிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொண்டர்களால் தலைமைப் பதவிக்கு ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டதால், போட்டி பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசரை அங்கீகரிக்க இயலாது எனக் கூறி இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடியை ஜெயலலிதாவுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது.
முலாயம்சிங் யாதவ் vs அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சியில் முலாயம்சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், கட்சியில் 90 சதவீத நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது.
உத்தவ் தாக்கரே vs ஏக்நாத் ஷிண்டே
அதிமுகவில் நடப்பது போலவே, சிவசேனாவிலும் தற்போது அதிகார போட்டி நிலவி வருகிறது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றி இருந்தாலும் கட்சி யாருக்கு செல்லும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.
ஓபிஎஸ் vs இபிஎஸ்
தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி என இருவருமே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட இரட்டைத் தலைமை எனப் பதிவாகியுள்ளதால், தற்போதைய பொதுக் குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்?
கட்சியின் உண்மை நிலவரம், வழக்கின் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி யாருக்கு சொந்தம் என்பது முடிவு செய்யப்படும். கட்சியின் முடிவுகளை தீர்மானிக்கும் அமைப்புகள், கட்சியின் தொழிலாளர் அமைப்பு, பெண்கள் அணி, இணைஞரணி, கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டுதான் கட்சி யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தேர்தல் ஆணையத்தின் முடிவில் திருப்தி அடையவில்லை எனில் குறிப்பிட்ட பிரிவு நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்