தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 11-ஆம்‌ வகுப்பில்‌ பயிலும்‌ மாணவர்களில்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசு மாதிரிப்‌ பள்ளியில்‌ ஜூன் 21ஆம் தேதிக்குள் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். 


உறுப்பினர்‌ செயலர்‌ சுதன் ஐஏஎஸ், தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக, அரியலூர்‌, செங்கல்பட்டு, கோயம்புத்தூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்‌, கன்னியாகுமரி, கரூர்‌, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, நாமக்கல்‌, நீலகிரி, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சேலம்‌, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர்‌ தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருப்பூர்‌, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, திருவாரூர்‌, தூத்துக்குடி, வேலூர்‌, விழுப்புரம்‌, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


''மாதிரி பள்ளிகள்‌ (Model Schools) - அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ கல்வி, நுண்கலை மற்றும்‌ விளையாட்டுகளில்‌ சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக, சிறப்பு திட்டமாக மாதிரிப்‌ பள்ளிகள்‌ உருவாக்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தும்‌ விதமாக அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர்‌, சேலம்‌, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும்‌ விழுப்புரம்‌ ஆகிய 10 மாவட்டங்களில்‌ 9, 10, 11 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ உண்டு, உறைவிட வசதியுடன்‌ கூடிய 10 மாதிரிப்‌ பள்ளிகள்‌ 2021- 2022ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


2022 - 2023 -ஆம்‌ கல்வியாண்டில்‌ 9ஆம் வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை சென்னை, மதுரை, திருப்பத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, கோயம்புத்தூர்‌, திருவள்ளுர்‌, வேலூர்‌, நாகப்பட்டினம்‌, இராணிப்பேட்டை, தஞ்சாவூர்‌ ஆகிய 15 மாவட்டங்களில்‌ 17 மாதிரிப் பள்ளிகள்‌ தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


 2023-24-ஆம்‌ கல்வியாண்டில்‌ 9ஆம் வகுப்பு முதல்‌ 12ஆம் வகுப்பு வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, மயிலாடுதுறை, திருப்பூர்‌,நாமக்கல்‌, கரூர்‌, திண்டுக்கல்‌, தேனி, புதுக்கோட்டை, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில்‌ மாதிரி பள்ளிகள்‌ தொடங்கப்பட்டு உள்ளன.


இதையடுத்து 11-ஆம்‌ வகுப்பில்‌ பயிலும்‌ மாணவர்களில்‌ குறிப்பிட்ட மாணவர்கள்‌ தங்களது மாவட்டங்களில்‌ உள்ள அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து 11-ஆம்‌ வகுப்பில்‌ உயிரியியல்‌ மற்றும்‌ கணினிப்‌ பிரிவில்‌ மாதிரிப்‌ பள்ளியில்‌ சேர தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்‌. இவர்கள்‌ அனைவரும்‌ சம்பந்தப்பட்ட மாதிரிப்‌ பள்ளியில்‌ 21.06.2023-க்குள்‌ சேர உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாதிரி பள்ளிகளின்‌ தலைமை ஆரியர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌’’.


இவ்வாறு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.