அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்தவுடன் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அமலாக்கத்துறை 15 நாள் காவல் கோரிய மனு மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின், மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் கார்த்திக் தேசாரியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்தவுடன் ஜாமீன் மனு மற்றும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 15 நாள் காவல் கோரிய மனு ஆகியவற்றின் மீது விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க